Saturday, June 20, 2015

சப்த மாதர்கள்

எங்கும் ஒரே நிசப்தம். திடீரென்று உலகம் குலுங்கியது. பட்சிகள் சிறகுகளை அடித்துக் கொண்டு பறந்தன. மிருகங்கள் மிரண்டு வெருண்டு ஓடின. மரஞ்செடி கொடிகள் காற்றால் நிலை தடுமாறிச் சாய்ந்தன. கடல் பொங்கி வந்தது. ஓ...! இதுதான் ஊழியோ? ஆம். அதுவும் கற்ப பிரளயம். அதாவது உலகம் முழுமையும் அழிகிற காலம். அழிவது என்றால் ஆதிமூலத்திடம் ஒடுங்குவதாகும். உலகம், ஜீவன்கள், சகல வஸ்துகள் எல்லாம் செயலின்றி, உருவின்றி மூலத்தில் சங்கமம் ஆவது ஆகும். இதோ அதிவேகமாக அனைத்தும் ஒடுங்கின. ஆனால் உலகத்தை..பிரபஞ்சத்தைப் பரிபாலனம் செய்யும் மகாவிஷ்ணு மட்டும் யோக நித்திரை செய்து கொண்டிருந்தார்.
யோக நித்திரையா? நித்திரை என்றால் தெரியும். தூக்கம். சரி! ‘யோகம்’ என்றால்...சேர்க்கை என்று பொருள். மூலத்தோடு பிறந்தவை அனைத்தும் சேர்வதாகும். மூலத்தில் இணைந்து லயிப்பதாகும். ப்ர-லயம் என்பதே பரத்தோடு லயிப்பதுதான். விஷ்ணுவும் உலகத்தில் லீலைகள் செய்வதற்காகவே அப்போது யோக நித்திரையில் இருந்தார். மகான்கள் உலகத்தை மறந்து மூலத்தில் லயிப்பதற்காக யோகம் செய்வர். விஷ்ணு மேற்கொண்ட யோக நித்திரைக்குப் பெயர் யோகமாயை என்பதாகும்.
அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது காது அரித்தது. அதனால் காதைச் சொறிந்தார். காதுக் குரம்பை அழுக்கு வெளியே வந்தது. அந்த அழுக்கிலிருந்து மது கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் தோன்றினர். அவர்கள் இருவரும் விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மன் அங்கு அமர்ந்திருந்ததைக் கண்டனர். அவர்கள் இருவருக்கும் கோபம் தலைக்கேறியது. “விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருப்பதற்கு எங்களுக்குத்தான் உரிமை உண்டு. எழுந்து ஓடி விடு” என்றனர். பிரம்மன் கலங்கினார். மது, கைடபர்கள் பிரம்மன் மீது பாய்ந்தனர். இதை எதிர்பாராத பிரம்மன் பயந்து தாமரைத் தண்டிற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டார். ஆனால் நீண்ட நேரம் தண்டிற்குள் ஒடுங்கி இருக்க முடியாது. அதனால் இந்த மது கைடபரிடமிருந்து தப்பிச் செல்ல என்ன செய்வது என்று யோசித்தார்.
அப்போது பிரம்மனைக் காணாது மது கைடபர் மகிழ்ச்சியில் குதித்தனர். கண்ணில் பட்டவற்றை எல்லாம் அதம் செய்தனர். அப்போது தாமரைத் தண்டில் ஒடுங்கியிருந்த பிரம்மன் விஷ்ணுவைக் காண இயலவில்லை. அதனால் ஆதிபராசக்தியைப் பிரார்த்தித்தார். அவள்தான் விஷ்ணுவையும் யோக நித்திரையில் ஆழச் செய்துள்ளாள். யோக மாயா, ராத்திரி, பயங்கரி, யோக நித்திரையாகிய விஸ்வேஸ்வரி என்று துதித்தார். “தேவீ! மது கைடபரை மோகிக்கச் செய்து விஷ்ணுவைத் துயில் எழச் செய்வாய். மது கைடபர்கள் விஷ்ணுவால் சம்ஹாரம் செய்யப்பட வேண்டும். அதற்குத் தாயே...! நீயே துணை செய்ய வேண்டும்” என்று வேண்டினார். பிரம்மனின் துதியைக் கேட்ட யோகமாயா மகிழ்ந்து, “பிரம்மனே நீ வேண்டியபடியே நடக்கும் என்று அருளினாள். மகா விஷ்ணுவின் கண், முகம், மூக்கு, கைகள், இதயம் ஆகியவற்றிலிருந்து யோக மாயா விடுபட்டாள். பிரம்மன் கண்ணெதிரில் தோன்றினான். அதே சமயம் விஷ்ணு கண் விழித்தார். தம் கண்ணெதிரில் பிரம்மனை விழுங்குவதற்கு மது கைடபர் வருவதைக் கண்டு கோபங்கொண்டு சண்டையிட்டார். சண்டை ஓய்வதாக இல்லை. பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. அந்தச் சமயம் யோகமாயா மதுகைடபர்களை மோகிக்கச் செய்தாள். மோகங்கொண்ட அசுரர்கள் மதம் பிடித்ததால் விஷ்ணுவை நோக்கி, “நீ விரும்பும் வரத்தைக் கேள்” என்றனர். விஷ்ணு மனத்திற்குள் சிரித்துக் கொண்டார். “நீங்கள் வரம் தர விரும்பினால் என் கையினால் நீங்கள் இறந்துபட வேண்டும். இதுவே நான் விரும்பும் வரம்” என்றார். இதைக் கேட்ட அசுரர்கள் திடுக்கிட்டனர். விஷ்ணுவால் வஞ்சிக்கப்பட்டோம் என்றுணர்ந்தனர். இருந்தாலும் அஞ்சாமல் “விஷ்ணுவே நீ கேட்ட வரத்தைத் தருகிறோம். ஆனால் நீரின் ஈரம் துளிகூட இல்லாத இடத்தில்தான் எங்களை நீ கொல்ல வேண்டும்” என்றனர். மதுகைடபர் கேட்டுக் கொண்டபடியே நீரில்லாத தனது தொடையின்மேல் அவர்களை வீழச் செய்து சக்கரப்படையால் அவர்களின் தலைகளை அறுத்து எறிந்தார். இங்ஙனம் ‘யோகமாயா’ விஷ்ணுவைக் கொண்டு மதுகைடபர்களை அழித்தாள்.
மதுகைடபர்கள் அழிந்ததை அறிந்த மகிஷாசுர சைன்யம் இந்திரலோகத்திற்குச் சென்று தேவர்களோடு போர் செய்தனர். இந்திரனுக்கும் மகிஷனுக்கும் இடையே போர் நடந்தது. அசுரர்களின் கை ஓங்கியது. தேவர்களும் இந்திரனும் அவர்களோடு போர் செய்ய முடியாமல் துவண்டனர்; தோல்வியைச் சந்தித்தனர். மகிஷன் இந்திரலோகத்தை கொடுமை செய்தான்; தேவர்களைத் துன்புறுத்தினான். அஷ்டதிக்குப் பாலர்களை ஆட்டிப் படைத்தான். அஷ்டமாசித்திகள் தங்களை மறைத்துக் கொண்டு மனிதர்களைப் போல் பூமியில் மறைந்து வாழத் தலைப்பட்டனர். தேவேந்திரனும், மற்ற தேவர்களும் செய்வதறியாது திகைத்தனர். ஒருவாறு துணிந்து மும்மூர்த்திகளிடம் சென்று முறையிட்டனர்.
மும்மூர்த்திகளுக்குக் கோபம் மேலிட அவர்களின் முகத்திலிருந்து தீச்சுடர் எழுந்தது. அத்தீச்சுடர் தீப்பிழம்பாய் நிற்க ஜோதிமயமாகி அதிலிருந்து பத்தினிக்கனல் வீசும் ஒரு பெண்மணியாக தேவி உருவெடுத்தாள்.
சிவனின் நெற்றி ஒளி தேவியின் முகமாயிற்று; யமனின் ஒளி கூந்தலானது; திருமாலின் சங்கு சக்கரம் கைகளாகின; சந்திரனின் ஒளி மார்பகங்களாயின; இந்திரனின் ஒளி இடையானது; பிரம்மனின் ஒளி இரு கால்களாயின; வாயுதேவன் ஒளி காதுகளாயின; இங்ஙனம் சூரியன், குபேரன், பிரஜாபதி என்று ஒவ்வொருவரின் ஒளியும் அம்பிகையிடம் ஒருங்கே இணைந்தன.
சிவன் சூலம் கொடுக்க; விஷ்ணு சக்கராயுதம் தர; வருணன் பாசத்தோடு சங்கு வழங்க; அக்னி வேல் வழங்க; வாயு தேவன் வில் அம்பறாத்தூணி ஈய; இந்திரன் வஜ்ராயுதம் கொடுக்க; யமன் தண்டாயுதம் கொடுக்க; விஸ்வகர்மா கோடரி தந்தான்; இமவான் சிங்க வாகனம் தர ஆதிசேடன் நாகமணிமாலை பரிசளித்தான். பல படைகளையும் வாகனத்தையும் பெற்ற தேவி மனம் மகிழ்ந்து சிங்கநாதம் செய்தாள். தேவர்கள் தங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று மகிழ்ந்தனர். பூமி சுழன்றது; மலைகள் ஆட்டம் கண்டன; கடல் பொங்கியது. மூவுலகும் கலங்கின. அசுரர்கள் கோபங்கொண்டு போருக்கு எழுந்தனர். மகிஷனும் போருக்குத் தயாரானான். கண்ணெதிரே ஆயிரங்கைகளோடு கண் கூசும்படி ஒளி வீசி நிற்கும் துர்க்கையைக் கண்டான்.
மகிஷனுடைய படைத்தளபதி சக்ஷு நால்வகைப் படைகளோடும் துர்க்கையோடு சண்டையிட வந்தான். அவனோடு உதக்ரன், மஹாஹகன், அசிலோமா பாஸ்கரன் என்று பலரும் பல்வேறு படைளுடன் அடுத்தடுத்து வந்தனர். அனைவரையும் அம்பிகை பல நூறு அஸ்திரங்களைக் கொண்டு அழித்தாள். பின்னர் அவள் வாகனமாகிய சிங்கமும் தாவித் தாவிக் குதித்து பிடரிமயிரைச் சிலிர்த்துக் கொண்டு, காலினால் அறைந்து, நகங்களால் கீறி அசுரர்களின் உயிர்களைக் கவர்ந்து உண்டது.
அம்பிகை தேவி மூச்சு விடும்போது கோடி நூறாயிரம் வீரர்கள் தோன்றி அசுர சைன்யத்தை நாசம் செய்தனர். உலர்ந்த புல்வெளியைக் காட்டுத்தீ விரைவாகக் கரியாக்குவதைப் போல அரை நொடிக்குள் அம்பிகை அசுரர் படைகளை அதம் செய்து போட்டாள். மகிஷாசுர சைன்யம் முழுவதும் அழிந்தது. தேவர்கள் மலர் மாரி சொரிந்தனர். தம் சேனைகள் அழிந்ததால் மகிஷாசுரன் தனது மகிஷ உருவெடுத்து வெகுவாக தேவர்களை இம்சிக்கலானான்.
கொம்பால் சிலரை அடித்து ஒழித்தான்; பாதக் குளம்புகளால் நசுக்கினான்; வாலைச் சுழற்றிப் பலரை அடித்தான்; மூச்சுக் காற்றினால் பீடித்தான்; கொம்பால் குத்திப் புடைத்தான். சிங்கத்தைக் கொல்லத் தாவினான். அம்பிகை கோபமடைந்து மகிஷாசுரனை வதம் செய்ய பாசத்தை எடுத்து பலமாகக் கட்டினாள். அந்த நீசனும் எருமை உருமாறிச் சிங்கமாய் நின்றான். அம்பிகை மகிஷனை வெட்ட வந்தாள். அப்போது அவன் கையில் ஒரு கத்தியைக் கொண்டு ஒரு புருஷனாய் நின்றான். அம்பிகை சரங்களால் அடிக்க மகிஷன் மத்தகஜமாய் மாறித்தன் தும்பிக்கையால் சிங்கத்தை இழுத்தான். தேவி தும்பிக்கையை வெட்ட அவன் ஒரு நொடிக்குள் மகிஷமாய் மாறி ஒரு நொடிக்குள் புதுப்பலத்துடன் எதிர்க்கலானான். அம்பிகை ஆனந்தநிலையில் இருந்துகொண்டு சிரித்தாள். உன் உயிரைக் கண நேரத்தில் நீக்குவேன் என்று கூறிக் கொண்டே சூலத்தால் அவனைக் குத்தினாள். அப்போது அவன் உயிர்விடும்போது அரை எருமை, அரை ஆள் ஆனான். தேவி எருமையின் தலையைச் சீவி எறிந்தாள். அரை எருமை உடலினின்று அசுரன் அரை ஆளாய் வெளி வந்தான். வந்தவன் தலையை வெளியே நீட்ட உடைவாளை உருவி தலையைத் துண்டித்தாள். மகிஷாசுரன் அழிந்ததைக் கண்டு பூச்சொரிந்து கொண்டாடினர்; தேவமாதர்கள் நாட்டியமாடினர்; கந்தர்வர்களும் உம்பர்களும் துதிபாடினர்.
மகிஷாசுரன் இறந்ததைக் கேட்டுச் சும்பன் வெகுண்டெழுந்தான். பக்கத்திலிருந்த படைத்தலைவன் தூம்ரலோசனனைப் பார்த்து, “துர்க்கையாகிய அந்தப் பெண்ணை மயிர் பிடித்து இழுத்து வா; மயிலே! மயிலே! என்றால் இறகு போடாது. உயிர்த் துடிக்க நீ அவளைக் கொண்டு வா. உடனே போ” என்றான்.
தூம்ரலோசனனும் நாற்படைகளுடன் போரிடப் புறப்பட்டுப் போனான். தேவியைப் பம்பரமாயச் சுழன்று புடைத்தான்; அதைக் கண்ட தேவியின் வாகனமாகிய சிங்கம் ஆவேசத்துடன் கர்ஜனை செய்து மூவுலகும் நடுங்க காலால் அறைந்து அசுரர்களைப் பற்களால் கடித்து, ரத்தம் கொட்ட மண்டையைப் பிளந்தது. அவர்கள் சதையைப் பிய்த்து எடுத்து ரத்தம் குடித்தது. சில நொடிகளில் தூம்ரலோசனனும் அவனுடைய சைன்யமும் நிர்மூலமாயின.
தூதுவன் மூலம் தூம்ரலோசனன் அழிவைக் கேட்ட சும்பன், சண்டன், முண்டன் என்ற இருவரை அழைத்து தேவியின் சிங்கத்தைக் கொன்றுவிட்டு வருமாறு அனுப்பினான். அவர்கள் இருவரும் மிகவும் உக்கிரமாகப் போரிட்டனர். இதைக் கண்டு அம்பிகை தன் நெற்றியிலிருந்து அழகிய தேவியான காளி என்பவளை உண்டாக்கினாள். காளி கரு நிறத்தவள்; கண்களில் நெருப்புப் பொறி பறக்க, கையில் கத்தியைக் கொண்டு, கழுத்தில் மனிதர்களின் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து நுனி நாக்கை நீட்டிக் கொண்டு கண்டவர் அனைவரும் நடுங்கிட நிமிடத்தில் அத்தனை படைகளையும் வெற்றிலை மெல்வதுபோல மென்றாள் காளி.
சுற்றிலுமிருந்தவர்களைச் சூரணமாக்கி மற்றைய அசுரர்களைப் பற்றியிழுத்து பட்சணம் செய்தாள். படைகள் அனைத்தையும் வாயிலிட்டுச் சீடை முறுக்கு தின்பது போல் நெறு நெறு என்று கடித்தாள். சிலரின் தலை மயிரைப் பிடித்து இழுத்தாள்; சிலரின் கழுத்தினை நெரித்தாள்; சிலரின் குடலைப் பிடுங்கி வெளியில் எடுத்தாள். இப்படிக் கையினால் அடித்தும் தரையில் தள்ளியும்; பொசுக்கியும்; துடிக்கத் துடிக்க உதைத்தும்; கத்தியால் வெட்டியும்; பம்பரமாய்ச் சுற்றியும் அனைவரும் நடுங்கச் சண்டையிட்டாள்.
இந்தப் பேரழிவைக் கண்ட சண்டனும் முண்டனும் ஓடிவந்து வில்லை வளைத்துச் சரமாரியாக அம்பு மழை பொழிந்தனர். காளியானவள் அவர்கள் பயன்படுத்திய படைக்கலங்கள் அனைத்தையும் வாய்க்குள்ளே போட்டுப் பயன் இல்லாமல் போகுமாறு செய்தாள். முடை நாற்றம் வீசும் சண்டமுண்டர்களின் தலைகளை கத்தியால் வெட்டி எறிந்தாள். அந்த இரண்டு தலைகளையும் இரு கைகளிலும் எடுத்துக் கொண்டு கண்டவர்கள் கிலி பிடிக்க அட்டகாசம் செய்து நின்றாள்.
காளியைக் கண்ட அம்பிகை, “நீ சண்டமுண்டர்களின் தலைகளைக் கொண்டு வந்ததால் இனிமேல் இவ்வுலகம் உன்னைச் “சாமுண்டி” என்ற சக்தி தேவதையாக வணங்குவர்” என்றாள். இங்ஙனம் சண்டிகையும் நெற்றிக்கனலில் பிறந்த காளி அன்று முதல் சாமுண்டி என்று பெயர் பெற்றாள். இந்தச் சாமுண்டியை ஈசுவரியாக வழிபடுவதை மைசூரில் காணலாம்.
சண்டமுண்டர் வதம் கேட்ட சும்பன் கடுங்கோபம் கொண்டான். அரக்கர் சேனைகளைக் காளியோடு போர் புரிய ஆணையிட்டான். சும்பனின் கட்டளையை நிறைவேற்ற 86 கோடி அசுரர்கள் போருக்கு எழுந்தனர். அந்தப் பெரும்படை தன்மேல் போருக்கு வருவதைக் கண்ட சண்டிகை தன் கைவில்லை வளைத்தாள்; சிங்கமும் சீறி எழுந்தது; அசுரர்கள் சிங்கத்தையும் சண்டிகையையும் சூழ்ந்து நின்று சண்டையிட்டனர். அப்போது சப்த சக்திகளும் அம்பிகைக்குத் துணையாகப் போரிடலாயினர்.
சப்தசக்திகள் யார்? ‘பிரும்மாணி’ அன்னவாகனத் தேரிலேறி கமண்டலம் ஸ்படிகமணி மாலை இவற்றைக் கொண்டு நின்றாள்.
‘மகேசுவரி’ புலித்தோலை உடுத்திக் கொண்டு நெற்றியில் பிறை அணிந்து, நாகங்களை நகையாகப் பூண்டு, கையில் திரிசூலம் ஏந்தி வெள்ளை ரிஷபத்தில் ஏறி வந்தாள்.
‘கௌமாரி’ கையில் வேலினைக் கொண்டு மயில் மீது துள்ளி வந்தாள்.
‘வைஷ்ணவி தேவி’ கையில் சங்கு சக்கரம் கத்தி, கதை, சார்ங்கம் என்ற பஞ்சாயுதங்களை ஏந்தி கருடன் மீது துணையாக வந்தாள்.
வாராகிதேவி பெண் பன்றியின் முகம் கொண்டு போரிட வந்தாள். நரஸிங்கி தேவியும் நரசிம்ம மூர்த்தியின் உக்ர உருக் கொண்டு பிடரி மயிர் சிலிர்க்க உதறி கத்தி, கதைகளைக் கொண்டு சண்டையிட வந்தாள்.
ஐந்தரியும் ஐராவதமாகிய வெள்ளை யானை மீதேறி வஜ்ராயுதத்தைக் கொண்டு போரிட வந்தாள். இந்த ஏழு பேரும் அம்பிகையிடமிருந்து போரிட வர, அம்பிகையின் உடலிலிருந்து ஒளி வீசும் ஒரு தேவி உதித்தாள். அவள் நூறு நரிகள் கூடி ஒலி செய்தால் எப்படி இருக்குமோ அதைப் போல பேரொலி செய்து சிவபெருமானை அழைத்தாள். அவளது அழைப்பைக் கேட்ட சிவன் ஓடோடி வந்தார். தேவியானவள் ஈசானனாகிய சிவனை சும்ப நிசும்பனிடம் தூது செல்லுமாறு அனுப்பினாள். சும்ப நிசும்பனிடம் “தேவர்களை உடனே சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்; இந்திரனுக்கு அரசாட்சி அளிக்க வேண்டும்; இல்லையேல் போரில் இறந்து போவீர்கள்” என்று செய்தி சொல்லி அனுப்பினாள்.
அம்பிகையானவள் சிவனையே தூது செல்ல அனுப்பியதால் அன்று முதல் ‘சிவதூதி’ என்று அழைக்கப்பட்டாள். தேவீ சொன்னவாறு சிவனும் சென்று தூது சொல்ல அது கேட்ட அசுரர்கள் கத்தி, வேல், அம்பு, தடி, சூலம், கலப்பை, உலக்கை, குந்தம் முதலான பல படைக்கலங்களையும் கொண்டு வந்து தேவியுடன் போரிட்டனர்.
தேவி வெகுண்டு வில்லை வளைத்தாள். அவளுக்கு முன் காளி வந்து தாவித் தாவிக் குதித்து கத்தியாலும் வாளினாலும் அசுரர் உயிர்களைக் குடித்தாள். பிரும்மாணி கமண்டல நீரை அள்ளித் தெளித்து அரக்கர்களை அழித்தாள்; மகேசுவரி சூலத்தாலும்; கௌமாரி வேலாலும்; வைஷ்ணவி சக்கரத்தாலும், ஐந்திரி வஜ்ரத்தாலும் அடிக்க அசுரர்களின் ரத்தம் புரண்டோடியது. வாராகி தேவி அசுரர்களை மூக்கினால் குதறியும் குளம்பினால் மிதித்தும் பலரின் உயிரைப் போக்கினாள்.
நரஸிங்கி தேவி தன் நகங்களால் கிழித்து குடல்களை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டாள்; பற்களால் கடித்தாள்; எழுந்தவர்களைக் காலால் மிதித்துத் தரையில் அறைந்தாள். இப்படி சப்தமாதர்களும் (சப்த சக்திகளும்) சமர்க்கோலம் பூண்டு வெற்றியடைந்தனர். சப்த மாதர்களின் செயல்களையும் வெற்றியையும் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரக்தபீஜன் என்ற அசுரன் போருக்கு வந்தான்.
ரக்தபீஜன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு ரத்தச் சொட்டும் உடனே ரக்த பீஜர்களாய் மாறி நிற்கும். ஆகையால் ஐந்திரி தேவி அவனை வஜ்ராயுதத்தால் அடித்தபோது அவன் உடம்பிலிருந்து கொட்டிய ரத்தம் ஆயிரம் ரத்தபீஜர்களாகக் கிளம்பியது. அவர்கள் அனைவரும் வலுவுடன் போரிடக் கிளம்பினர். இதைக்கண்ட வைஷ்ணவிதேவி அவர்களைச் சக்கரத்தால் அடித்தாள்; வாராகி தேவி கத்தியால் குத்தினாள்; மகேசுவரி தேவியும் கௌமாரி தேவியும் சூலத்தாலும், வேலாலும் மாறி மாறி அடிக்க, ரக்த பீஜர்களின் ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓட அதிலிருந்து கோடிக்கணக்கான ரக்தபீஜர்கள் தோன்றினர்.
இதனைக் கண்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் கலங்கி நடுநடுங்கி அம்பிகையைப் பார்த்து, “சாமுண்டி தேவியே! உன் வாயை அகலமாகத் திற; பூமியின் மீது விழும் ரத்தத்தை விழுவதற்கு முன் குடித்துவிடு; இறந்து விழும் ரக்தபீஜர்கள் மீண்டும் அவர்கள் பிறப்பதற்கு முன் அவர்களைக் கபளீகரம் செய்து விடு” என்று வேண்டினர்.
இதைக் கேட்ட ரக்தபீஜன் மிகுந்த சினத்துடன் சண்டிகையை கதையால் சாடினான். ஆனால் தேவிக்குத் துளிகூடக் கெடுதல் இல்லை. ஏனெனில் செங்குருதி குடித்து உற்பவிக்கும் ரக்தபீஜர்களைத் தின்று விட்டாள் ஆங்காலக்காளி. ரத்தம் துளி மிச்சமின்றிக் காளியும் குடிக்கவே நிலைதடுமாறி பூமியின் மேல் ரக்தபீஜனும் பிணமாக விழுந்தான். ரக்தபீஜன் பிணமாக விழுந்ததைக் கண்ட சப்தமாதர்கள் களிப்பினால் நடனமாடினர். உம்பர்கள் களிப்பினால் பாடி ஆடினர்.
ரக்தபீஜன் சண்டிகையால் வதஞ்செய்யப்பட்டான் என்பதை அறிந்த நிசும்பன், சும்பன் இருவரும் போருக்கு வந்தனர். சும்பனுடைய தம்பி நிசும்பன் கத்தியை எடுத்துச் சிங்கத்தைக் குத்தினான். சப்தமாதர்கள் கண்ணால் காணும்படி தேவி நிசும்பனுக்கு எதிரே கத்தியைச் சுழற்றினாள். அவனுடைய கத்தியையும் விரலையும் அறுத்துத் துண்டாக்கினாள். கோடரியை எடுத்துக் கொண்டு நிசும்பன் ஓடி வந்தான். தேவி பாணத்தினால் அடிக்க அவன் மாடு போல விழுந்தான். அப்போது காளி பூமியில் தூளி எழுமாறு கையில் ஓங்கி அறைந்தாள். எல்லாருடைய காதும் செவிடாயிற்று. அதைப் பார்த்த சிவதூதியாகிய துர்க்கை சண்டிகை அட்டகாசமாய்ச் சிரித்தாள். அப்போது சும்பன் எட்டுத் திசையும் கிடுகிடுக்க ஏழுலகும் நடுநடுங்க அம்பிகையின் மீது ஒரு வேலை ஏவினான். தேவி அதை ஒரு கொள்ளியால் அடித்து சுக்கு நூறாக்கினாள். சிங்கம் கர்ஜனை செய்தது. சும்பனும் சிம்மநாதம் செய்தான். அதற்குள் நிசும்பன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். அப்போது சக்கரத்தைச் சுழற்றி, கைச்சூலத்தால் அவன் மார்பைப் பிளந்தாள்.
நிசும்பன் இறந்ததைக் கண்ட சும்பன் வெகுண்டெழுந்தான். அனல் பொறி பறக்க அம்பிகையைப் பார்த்து, “ஏய்..சண்டி..! நீ தனிப்பட்டவளாகப் போரிடவில்லையே..மற்றவர்களின் பலத்தினால் அல்லவா வென்றாய்? தைரியம் இருந்தால் என்னுடன் நேராகத் தனித்து நின்று போர் செய். பார்க்கலாம்” என்று கூறிக் கொண்டே தேவியின் மார்பில் அடிக்க வந்தான். உடனே தேவி சும்பனைப் பார்த்து “அடே, துஷ்டா! இந்த உலகில் என்னைத் தவிர வேறு எவருமில்லை. இங்கு நிற்பவர்கள் எல்லாரும் என்னுடைய சக்திகளே!” என்று சொன்னாள். அவனுடைய கண்ணெதிரிலேயே அம்பிகையின் உடலுக்குள்ளே அத்தனை தேவியரும் லயமாகிவிட்டார்கள்.
சக்திகள் அனைவரும் தேவிக்குள் அடங்க அம்பிகை சும்பனோடு போரிடலானாள். தேவி அவன் மார்பில் ஒரு கணையால் அடிக்க சும்பன் அலமந்து கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் சும்பன் அம்பிகையைத் தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறந்தான். அவனது பராக்கிரமத்தைக் கண்ட தேவி அவனைக் கரகரவென்று பம்பரமாய்ச் சுழற்றிப் பூமியில் எறிந்தாள். அவன் எழுவதற்குள் சூலத்தினால் அவனைக் குத்த சும்பன் மாண்டான்.
குவலயம் முழுவதும் குதூகலம் கொண்டது. தேவர்கள் மகிழ்ந்து அம்பிகையைக் கொண்டாடினர்; கந்தர்வர்கள் வீணாகானம் இசைத்தனர். அப்ஸரஸ் ஸ்த்ரீகள் ஆடலாயினர்; மங்கல வாத்தியங்கள் முழங்கலாயின.
“நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை” என்று தேவர்கள் திரும்பத் திரும்ப வணங்கினர். நாமும் அம்பிகையை வணங்குவோம். எப்படி?
மதுகைடப வதம் நம்முள் நடக்க வேண்டும். மது-சிற்றின்பம். இது தற்காலிகமானதேயாகும். சிற்றின்பம் அதர்மத்தில் தள்ளுகிறது. தர்மத்தை மறக்கச் செய்கிறது. வெளியுலகிற்காகப் பெயரளவில் தர்மத்தைக் கடைப்பிடிப்பதைப் போலக் காட்டிக் கொள்வது; அதாவது வெறும் புழு போல் (கீடபம்-புழு) இருத்தல். கீடபமானது தான் கைடபம் ஆயிற்று. மது கைடபத் தூண்டுதலே பாபம் புரியக் காரணமாகும்.
மகிஷாசுர சைன்யம் வதம் நிகழ வேண்டும். இயற்கை உந்துதல்களையும் இந்திரிய இன்பங்களையும் வெல்ல வேண்டும். மகிஷாசுரவதம் - நம்மை விஞ்சியவர் கிடையாது என்ற மமதையில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு செயல்படுவதை விட வேண்டும். தூம்ரலோசனனை வதம் செய்தாக வேண்டும். புகையைப் போன்று நமக்குள் எழும் அடுக்கடுக்கான ஆசைகள், பொறாமைகள் ஆகியவற்றை விட்டு ஒழிக்க வேண்டும்.
சண்ட முண்டன் வதம் கன்மம் மாயை இதிலிருந்து விடுபட வேண்டும். அதற்கு நாம் மகான்கள் இல்லை. அப்படியானால் என்ன செய்யலாம்? பிதிர் கடன், இறைவழிபாடு ஆகியவற்றையாவது முறையாகச் செய்ய வேண்டும்.
ரக்தபீஜன் வதமாகிய ஆணவத்தை (தலை தூக்கிக் கொண்டே இருக்கக் கூடியது.) விட்டொழிக்க வேண்டும்.
நிசும்ப, சும்பன் வதமாக, ஸ்ரீராம கிருஷ்ணர் கூறி வாழ்ந்து காட்டியதைப் போல் பழுக்காத நான் என்பதிலிருந்து பழுத்த நான் என்பதற்கு வர வேண்டும். அதற்குப் பூரணமாக அம்பிகையை சக்தியைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை என்று அர்ப்பணிக்க வேண்டும்.
இங்ஙனம் தேவியின் வெற்றியை நினைத்து அவளையும் அவளுக்கு உதவிய அவளது அம்சமாகிய சப்தமாதரையும் தியானம் செய்பவர்களுக்கும் அவள் சரித்திரத்தைச் சொல்பவர்களுக்கும் அவள் சரித்திரத்தைக் கேட்பவர்களுக்கும் ஒரு நாளும் தீது அணுகாது; தோல்வி கிட்டாது; நோய் நொடி அணுகாது; ஆபத்து வராது. விபத்து நேராது; வறுமை வராது. பகை பெருகாது; செல்வம் பெருகும்; மறுமாசு கிட்டாது; மனம் நோகாது; தன்னைச் சேர்ந்தவர்களுக்கு அல்லல் நேராது; நீரினாலும் நெருப்பினாலும் விபத்து நேராது; திருடர் பயம் அணுகாது; சுருங்கக் கூறின் கோரக் கலிகாலத்தின் கொடுமை ஏதும் நேராது.
தியானம்
மது கைடபர்களை வதம் செய்து நின்றோய்!
மகிடன் எனும் எருமையைச் சாடியே கொன்றோய்!
அதிரவரும் தூம்ரனை அரைநொடியில் வென்றோய்!
சண்டனையும் முண்டனையும் பந்தாடி நின்றோய்!
உதிர பீஜன் உதிரம் ஒரு நொடியில் குடித்தோய்!
ஓங்கிவரும் சும்பனை ஆங்கு உயிர் எடுத்தோய்!
எதிரில் வரும் நிசும்பனைக் கொன்றாவி முடித்தோய்!
எமக்கருள்க துர்க்கையே! அம்பிகையே!

No comments:

Post a Comment