Monday, June 22, 2015

நல்லதங்காள் வரலாறு

நல்லதம்பி, நல்லதங்காள்
அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
பஞ்சம்
திருமணம் ஆன இளம் வயதிலேயே நல்ல தங்காள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். இதில் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள். இந்நிலையில், மானா மதுரையில் மழை பொய்த்ததால் பஞ்சம் தலைவிரித்தாடியது.
தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழையே இல்லை. உண்ண உணவுஇன்றி மக்கள் பலரும் மாண்டனர். நல்ல தங்காள் குடும்பமும் அந்நிலைக்கு ஆளானது. அவள், அண்ணன் கொடுத்தனுப்பிய சீதனப் பொருட்களை ஒவ்வொன்றாக விற்றாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தது. சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் போனது. மனம் உடைந்த நல்ல தங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தான் பிறந்த அர்ச்சுனாபுரம் கிராமத்துக்கு வந்தாள்.
மூளியலங்காரி
அப்போது அவளது அண்ணன் நல்லதம்பி வேட்டையாடக் காட்டுக்கு சென்று இருந்தார். அண்ணன் வரும்வரை அரண்மனையில் தங்கி இருக்கலாம் என்று எண்ணிய நல்ல தங்காள் அங்கு சென்றாள். பசியால் வந்த நல்ல தங்காளையும், அவள் குழந்தையையும் ஆதரிக்காமல் ஓட்டை மண்பானையையும், பச்சை விறகையும், பயன்படுத்த முடியாத கோப்பையையும் கொடுத்து உணவாக்கி உண்ணச் சொன்னாள்.

பத்தினி தெய்வத்தன்மை படைத்த நல்ல தங்காள் பார்த்த உடனே பச்சை விறகு தீப்பற்றி எரிந்தது. உணவு சமைத்து தானும் பிள்ளைகளும் உண்டு அரைப்பசியை தடுத்தனர். ஆனால் நல்ல தம்பியின் மனைவி மூளியலங்காரியோ, பல நாட்கள் பட்டினி கிடந்த நல்லதங்காளையும், அவளது பிள்ளைகளையும் உண்ண உணவு கூட கொடுக்காமல் அரண்மனையை விட்டே துரத்தினாள்.அண்ணன் வருவான் என்று எதிர் பார்த்தாள். நாட்கள் சில கடந்தன. பசி வாட்டியது. பிள்ளைகள் வாடின. அண்ணன் தன் நிலையைப் பார்த்து துடிப்பான், அண்ணியின் இரக்கமற்ற தன்மையைக் கேட்டால் கொதிப்பான், எனவே தானும், குழந்தைகளும், மாய்வதே சிறப்பு என்று நினைத்தாள்.


தற்கொலை
மூளியலங்காரியின் கடும் சொற்களால் மனம் உடைந்த நல்லதங்காள் குழந்தைகளுடன் வந்த வழியே திரும்பினாள்.
"எந்த உதவியும் இல்லாமல் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகிவிட்டேனே... இனி, யாரை நம்பி நான் வாழப்போகிறேன்? என் பிள்ளைகள் எப்படி வாழப்போகிறார்கள்?" என்று பலவாறு யோசித்தாள்.
அப்போது, அவளது குழந்தைகள், ‘அம்மா பசிக்குது... ஏதாவது வாங்கிக் கொடும்மா...’ என்று அழ ஆரம்பித்து விட்டனர். அவளது கையிலோ பணமோ அல்லது பொருளோ எதுவும் இல்லை.
குழந்தைகளின் பசியைப் போக்க வழி தெரியாமல் தவித்த அவளுக்கு அங்கிருந்த ஒரு பாழடைந்த கிணறு கண்ணில் பட்டது. நேராகக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள்.
பசியால் துடித்து அழுத குழந்தைகளை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டாள். ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்டு கொன்ற பிறகு, தானும் அதே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.
    இதைக் கேள்விப்பட்ட அண்ணன் நல்லதம்பி தன் மனைவியை கொன்று விட்டு தானும் கத்தியால் குத்தி அதே கிணற்றில் வீழ்ந்து மாண்டான்.
சிவபெருமான் அருள்
        அண்ணன் - தங்கை பாசம் என்றால் இதுவல்லவா? என்று மெச்சிய சிவனும், பார்வதியும் அங்கே தோன்றினர். பத்தினியான நல்லதங்காள் தெய்வ பக்தி கொண்டவள். எனவே இறைவனும் இறைவியும் அங்கு தோன்றி அவர்களை உயிர்ப்பித்து மீண்டும் இப்புவியில் வாழ் என்றார்கள். ஆனால் மாண்டவரெல்லாம் மீண்டும் வந்தால் இப்புவியில் இடம் இருக்காது. அந்த தவறுக்கு நான் துணையாக இருக்க மாட்டேன். எங்களை உன் திருவடியில் சேர்ப்பாயாக என்று வேண்டினாள். அதற்குரிய காலம் விரைவில் வரும். அதுவரை இங்கே அம்பாளாக இருந்து இப்புவிமக்களுக்கு அருள் பாலிப்பாயாக என்று கூறி மறைந்தனர். அன்று முதல் இங்கே நல்ல தங்காள் தெய்வமாக காட்சியளிக்கிறாள். நல்ல தங்காளுக்கும், நல்லதம்பிக்கும் இரண்டு கோயில்கள் கட்டி வணங்குகின்றனர் மக்கள். குழந்தைகளும் சிலைவடிவம் பெற்றுள்ளனர். இவர்கள் வாழ்ந்த அரண்மனையின் எஞ்சிய இடிபாடுகள், தற்கொலை செய்துகொண்ட கிணறு போன்ற சரித்திரச் சான்றுகளை, வத்திராயிருப்பில் இன்றும் காணலாம். நல்லோர் தெய்வமாவர் என்ற ஆன்மிக தத்துவத்தின் அடிப்படையில் நல்லதங்காள், நல்லதம்பி தெய்வமாகவும் அவர்கள் வாழ்ந்த அரண்மனை கோயிலாகவும் போற்றப்படுகிறது. தன்னால் அண்ணனுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என தங்கையும், தங்கைக்கு கிடைக்காத வாழ்க்கை, தனக்கு தேவையில்லை என அண்ணனும் உயிரை மாய்த்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அண்ணன், தங்கை பாசம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு, ஈடில்லாத ஓர் உணர்வுப்பூர்வமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது நல்லதங்காள் கதை.


நல்லதங்காள் கோயில்

       நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஊர் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில்வத்திராயிருப்பு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயர் அர்ச்சுனாபுரம். பச்சை ஆடை போர்த்திய வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது அர்ச்சுனாபுரம். அங்கே வயல்வெளிக்கு மத்தியிலேயே கோவில் கொண்டுள்ளாள் நல்லதங்காள்.
கோயில் அமைப்பு
     நல்லதங்காள் கோவில் அமைப்பு மற்ற கோயில்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாகக் கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே இன்னொரு சன்னதியில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கோவிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து போய்க் காணப்படுகிறது. நல்ல தங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இங்கேதான் என்று சொல்கிறார்கள்.
விழாக்கள்
       இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் நடைபெறும் பொங்கல் விழாவில் நல்லதங்காளின் உறவினர் வழித் தோன்றல்களாக வந்தவர்கள், மானாமதுரையில் இருந்து இங்கு வந்து விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்தத் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அத்துடன், மாதம்தோறும் பவுர்ணமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது.

பிரார்த்தனை

பிள்ளைப்பேறு, பிள்ளைகள் நலமுடம் வாழ தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற எலுமிச்சை வைத்து கட்டப்பட்ட தொட்டிலை அம்மன் முன்பாகவும், ஏழு குழந்தைகளின் சன்னிதானத்திலும் கட்டி வணங்குகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிள்ளைப்பேறு கிடைத்தவர்கள் அம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தங்காள், நல்ல தம்பி என்று பெயரிட்டு வளர்க்கின்றனர்.
சிறப்பு
இந்தக் கோவிலுக்கு வந்து வேண்டினால் குடும்ப உறவு பலப்படும், திருமணமாகாத பெண்கள் வந்து மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கைகூடும், வாழ்வில் நலம் ஏற்படும் என்பது இக்கோயில் பக்தர்களின் நம்பிக்கை.
பயண வசதி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது இந்த கிராமம்.  ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வத்திராயிருப்புக்குச் சென்று, அங்கிருந்து சிற்றுந்து மூலமாக அர்ச்சுனாபுரம் செல்ல முடியும்.
சிறப்பம்சம்:

நல்லதங்காளுக்கு அமைந்த ஒரே கோயில்.    வறுமையின் சின்னமாக நல்லதங்காள் இன்னும் கதைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்

Saturday, June 20, 2015

சப்த மாதர்கள்

எங்கும் ஒரே நிசப்தம். திடீரென்று உலகம் குலுங்கியது. பட்சிகள் சிறகுகளை அடித்துக் கொண்டு பறந்தன. மிருகங்கள் மிரண்டு வெருண்டு ஓடின. மரஞ்செடி கொடிகள் காற்றால் நிலை தடுமாறிச் சாய்ந்தன. கடல் பொங்கி வந்தது. ஓ...! இதுதான் ஊழியோ? ஆம். அதுவும் கற்ப பிரளயம். அதாவது உலகம் முழுமையும் அழிகிற காலம். அழிவது என்றால் ஆதிமூலத்திடம் ஒடுங்குவதாகும். உலகம், ஜீவன்கள், சகல வஸ்துகள் எல்லாம் செயலின்றி, உருவின்றி மூலத்தில் சங்கமம் ஆவது ஆகும். இதோ அதிவேகமாக அனைத்தும் ஒடுங்கின. ஆனால் உலகத்தை..பிரபஞ்சத்தைப் பரிபாலனம் செய்யும் மகாவிஷ்ணு மட்டும் யோக நித்திரை செய்து கொண்டிருந்தார்.
யோக நித்திரையா? நித்திரை என்றால் தெரியும். தூக்கம். சரி! ‘யோகம்’ என்றால்...சேர்க்கை என்று பொருள். மூலத்தோடு பிறந்தவை அனைத்தும் சேர்வதாகும். மூலத்தில் இணைந்து லயிப்பதாகும். ப்ர-லயம் என்பதே பரத்தோடு லயிப்பதுதான். விஷ்ணுவும் உலகத்தில் லீலைகள் செய்வதற்காகவே அப்போது யோக நித்திரையில் இருந்தார். மகான்கள் உலகத்தை மறந்து மூலத்தில் லயிப்பதற்காக யோகம் செய்வர். விஷ்ணு மேற்கொண்ட யோக நித்திரைக்குப் பெயர் யோகமாயை என்பதாகும்.
அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது காது அரித்தது. அதனால் காதைச் சொறிந்தார். காதுக் குரம்பை அழுக்கு வெளியே வந்தது. அந்த அழுக்கிலிருந்து மது கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் தோன்றினர். அவர்கள் இருவரும் விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மன் அங்கு அமர்ந்திருந்ததைக் கண்டனர். அவர்கள் இருவருக்கும் கோபம் தலைக்கேறியது. “விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருப்பதற்கு எங்களுக்குத்தான் உரிமை உண்டு. எழுந்து ஓடி விடு” என்றனர். பிரம்மன் கலங்கினார். மது, கைடபர்கள் பிரம்மன் மீது பாய்ந்தனர். இதை எதிர்பாராத பிரம்மன் பயந்து தாமரைத் தண்டிற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டார். ஆனால் நீண்ட நேரம் தண்டிற்குள் ஒடுங்கி இருக்க முடியாது. அதனால் இந்த மது கைடபரிடமிருந்து தப்பிச் செல்ல என்ன செய்வது என்று யோசித்தார்.
அப்போது பிரம்மனைக் காணாது மது கைடபர் மகிழ்ச்சியில் குதித்தனர். கண்ணில் பட்டவற்றை எல்லாம் அதம் செய்தனர். அப்போது தாமரைத் தண்டில் ஒடுங்கியிருந்த பிரம்மன் விஷ்ணுவைக் காண இயலவில்லை. அதனால் ஆதிபராசக்தியைப் பிரார்த்தித்தார். அவள்தான் விஷ்ணுவையும் யோக நித்திரையில் ஆழச் செய்துள்ளாள். யோக மாயா, ராத்திரி, பயங்கரி, யோக நித்திரையாகிய விஸ்வேஸ்வரி என்று துதித்தார். “தேவீ! மது கைடபரை மோகிக்கச் செய்து விஷ்ணுவைத் துயில் எழச் செய்வாய். மது கைடபர்கள் விஷ்ணுவால் சம்ஹாரம் செய்யப்பட வேண்டும். அதற்குத் தாயே...! நீயே துணை செய்ய வேண்டும்” என்று வேண்டினார். பிரம்மனின் துதியைக் கேட்ட யோகமாயா மகிழ்ந்து, “பிரம்மனே நீ வேண்டியபடியே நடக்கும் என்று அருளினாள். மகா விஷ்ணுவின் கண், முகம், மூக்கு, கைகள், இதயம் ஆகியவற்றிலிருந்து யோக மாயா விடுபட்டாள். பிரம்மன் கண்ணெதிரில் தோன்றினான். அதே சமயம் விஷ்ணு கண் விழித்தார். தம் கண்ணெதிரில் பிரம்மனை விழுங்குவதற்கு மது கைடபர் வருவதைக் கண்டு கோபங்கொண்டு சண்டையிட்டார். சண்டை ஓய்வதாக இல்லை. பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. அந்தச் சமயம் யோகமாயா மதுகைடபர்களை மோகிக்கச் செய்தாள். மோகங்கொண்ட அசுரர்கள் மதம் பிடித்ததால் விஷ்ணுவை நோக்கி, “நீ விரும்பும் வரத்தைக் கேள்” என்றனர். விஷ்ணு மனத்திற்குள் சிரித்துக் கொண்டார். “நீங்கள் வரம் தர விரும்பினால் என் கையினால் நீங்கள் இறந்துபட வேண்டும். இதுவே நான் விரும்பும் வரம்” என்றார். இதைக் கேட்ட அசுரர்கள் திடுக்கிட்டனர். விஷ்ணுவால் வஞ்சிக்கப்பட்டோம் என்றுணர்ந்தனர். இருந்தாலும் அஞ்சாமல் “விஷ்ணுவே நீ கேட்ட வரத்தைத் தருகிறோம். ஆனால் நீரின் ஈரம் துளிகூட இல்லாத இடத்தில்தான் எங்களை நீ கொல்ல வேண்டும்” என்றனர். மதுகைடபர் கேட்டுக் கொண்டபடியே நீரில்லாத தனது தொடையின்மேல் அவர்களை வீழச் செய்து சக்கரப்படையால் அவர்களின் தலைகளை அறுத்து எறிந்தார். இங்ஙனம் ‘யோகமாயா’ விஷ்ணுவைக் கொண்டு மதுகைடபர்களை அழித்தாள்.
மதுகைடபர்கள் அழிந்ததை அறிந்த மகிஷாசுர சைன்யம் இந்திரலோகத்திற்குச் சென்று தேவர்களோடு போர் செய்தனர். இந்திரனுக்கும் மகிஷனுக்கும் இடையே போர் நடந்தது. அசுரர்களின் கை ஓங்கியது. தேவர்களும் இந்திரனும் அவர்களோடு போர் செய்ய முடியாமல் துவண்டனர்; தோல்வியைச் சந்தித்தனர். மகிஷன் இந்திரலோகத்தை கொடுமை செய்தான்; தேவர்களைத் துன்புறுத்தினான். அஷ்டதிக்குப் பாலர்களை ஆட்டிப் படைத்தான். அஷ்டமாசித்திகள் தங்களை மறைத்துக் கொண்டு மனிதர்களைப் போல் பூமியில் மறைந்து வாழத் தலைப்பட்டனர். தேவேந்திரனும், மற்ற தேவர்களும் செய்வதறியாது திகைத்தனர். ஒருவாறு துணிந்து மும்மூர்த்திகளிடம் சென்று முறையிட்டனர்.
மும்மூர்த்திகளுக்குக் கோபம் மேலிட அவர்களின் முகத்திலிருந்து தீச்சுடர் எழுந்தது. அத்தீச்சுடர் தீப்பிழம்பாய் நிற்க ஜோதிமயமாகி அதிலிருந்து பத்தினிக்கனல் வீசும் ஒரு பெண்மணியாக தேவி உருவெடுத்தாள்.
சிவனின் நெற்றி ஒளி தேவியின் முகமாயிற்று; யமனின் ஒளி கூந்தலானது; திருமாலின் சங்கு சக்கரம் கைகளாகின; சந்திரனின் ஒளி மார்பகங்களாயின; இந்திரனின் ஒளி இடையானது; பிரம்மனின் ஒளி இரு கால்களாயின; வாயுதேவன் ஒளி காதுகளாயின; இங்ஙனம் சூரியன், குபேரன், பிரஜாபதி என்று ஒவ்வொருவரின் ஒளியும் அம்பிகையிடம் ஒருங்கே இணைந்தன.
சிவன் சூலம் கொடுக்க; விஷ்ணு சக்கராயுதம் தர; வருணன் பாசத்தோடு சங்கு வழங்க; அக்னி வேல் வழங்க; வாயு தேவன் வில் அம்பறாத்தூணி ஈய; இந்திரன் வஜ்ராயுதம் கொடுக்க; யமன் தண்டாயுதம் கொடுக்க; விஸ்வகர்மா கோடரி தந்தான்; இமவான் சிங்க வாகனம் தர ஆதிசேடன் நாகமணிமாலை பரிசளித்தான். பல படைகளையும் வாகனத்தையும் பெற்ற தேவி மனம் மகிழ்ந்து சிங்கநாதம் செய்தாள். தேவர்கள் தங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று மகிழ்ந்தனர். பூமி சுழன்றது; மலைகள் ஆட்டம் கண்டன; கடல் பொங்கியது. மூவுலகும் கலங்கின. அசுரர்கள் கோபங்கொண்டு போருக்கு எழுந்தனர். மகிஷனும் போருக்குத் தயாரானான். கண்ணெதிரே ஆயிரங்கைகளோடு கண் கூசும்படி ஒளி வீசி நிற்கும் துர்க்கையைக் கண்டான்.
மகிஷனுடைய படைத்தளபதி சக்ஷு நால்வகைப் படைகளோடும் துர்க்கையோடு சண்டையிட வந்தான். அவனோடு உதக்ரன், மஹாஹகன், அசிலோமா பாஸ்கரன் என்று பலரும் பல்வேறு படைளுடன் அடுத்தடுத்து வந்தனர். அனைவரையும் அம்பிகை பல நூறு அஸ்திரங்களைக் கொண்டு அழித்தாள். பின்னர் அவள் வாகனமாகிய சிங்கமும் தாவித் தாவிக் குதித்து பிடரிமயிரைச் சிலிர்த்துக் கொண்டு, காலினால் அறைந்து, நகங்களால் கீறி அசுரர்களின் உயிர்களைக் கவர்ந்து உண்டது.
அம்பிகை தேவி மூச்சு விடும்போது கோடி நூறாயிரம் வீரர்கள் தோன்றி அசுர சைன்யத்தை நாசம் செய்தனர். உலர்ந்த புல்வெளியைக் காட்டுத்தீ விரைவாகக் கரியாக்குவதைப் போல அரை நொடிக்குள் அம்பிகை அசுரர் படைகளை அதம் செய்து போட்டாள். மகிஷாசுர சைன்யம் முழுவதும் அழிந்தது. தேவர்கள் மலர் மாரி சொரிந்தனர். தம் சேனைகள் அழிந்ததால் மகிஷாசுரன் தனது மகிஷ உருவெடுத்து வெகுவாக தேவர்களை இம்சிக்கலானான்.
கொம்பால் சிலரை அடித்து ஒழித்தான்; பாதக் குளம்புகளால் நசுக்கினான்; வாலைச் சுழற்றிப் பலரை அடித்தான்; மூச்சுக் காற்றினால் பீடித்தான்; கொம்பால் குத்திப் புடைத்தான். சிங்கத்தைக் கொல்லத் தாவினான். அம்பிகை கோபமடைந்து மகிஷாசுரனை வதம் செய்ய பாசத்தை எடுத்து பலமாகக் கட்டினாள். அந்த நீசனும் எருமை உருமாறிச் சிங்கமாய் நின்றான். அம்பிகை மகிஷனை வெட்ட வந்தாள். அப்போது அவன் கையில் ஒரு கத்தியைக் கொண்டு ஒரு புருஷனாய் நின்றான். அம்பிகை சரங்களால் அடிக்க மகிஷன் மத்தகஜமாய் மாறித்தன் தும்பிக்கையால் சிங்கத்தை இழுத்தான். தேவி தும்பிக்கையை வெட்ட அவன் ஒரு நொடிக்குள் மகிஷமாய் மாறி ஒரு நொடிக்குள் புதுப்பலத்துடன் எதிர்க்கலானான். அம்பிகை ஆனந்தநிலையில் இருந்துகொண்டு சிரித்தாள். உன் உயிரைக் கண நேரத்தில் நீக்குவேன் என்று கூறிக் கொண்டே சூலத்தால் அவனைக் குத்தினாள். அப்போது அவன் உயிர்விடும்போது அரை எருமை, அரை ஆள் ஆனான். தேவி எருமையின் தலையைச் சீவி எறிந்தாள். அரை எருமை உடலினின்று அசுரன் அரை ஆளாய் வெளி வந்தான். வந்தவன் தலையை வெளியே நீட்ட உடைவாளை உருவி தலையைத் துண்டித்தாள். மகிஷாசுரன் அழிந்ததைக் கண்டு பூச்சொரிந்து கொண்டாடினர்; தேவமாதர்கள் நாட்டியமாடினர்; கந்தர்வர்களும் உம்பர்களும் துதிபாடினர்.
மகிஷாசுரன் இறந்ததைக் கேட்டுச் சும்பன் வெகுண்டெழுந்தான். பக்கத்திலிருந்த படைத்தலைவன் தூம்ரலோசனனைப் பார்த்து, “துர்க்கையாகிய அந்தப் பெண்ணை மயிர் பிடித்து இழுத்து வா; மயிலே! மயிலே! என்றால் இறகு போடாது. உயிர்த் துடிக்க நீ அவளைக் கொண்டு வா. உடனே போ” என்றான்.
தூம்ரலோசனனும் நாற்படைகளுடன் போரிடப் புறப்பட்டுப் போனான். தேவியைப் பம்பரமாயச் சுழன்று புடைத்தான்; அதைக் கண்ட தேவியின் வாகனமாகிய சிங்கம் ஆவேசத்துடன் கர்ஜனை செய்து மூவுலகும் நடுங்க காலால் அறைந்து அசுரர்களைப் பற்களால் கடித்து, ரத்தம் கொட்ட மண்டையைப் பிளந்தது. அவர்கள் சதையைப் பிய்த்து எடுத்து ரத்தம் குடித்தது. சில நொடிகளில் தூம்ரலோசனனும் அவனுடைய சைன்யமும் நிர்மூலமாயின.
தூதுவன் மூலம் தூம்ரலோசனன் அழிவைக் கேட்ட சும்பன், சண்டன், முண்டன் என்ற இருவரை அழைத்து தேவியின் சிங்கத்தைக் கொன்றுவிட்டு வருமாறு அனுப்பினான். அவர்கள் இருவரும் மிகவும் உக்கிரமாகப் போரிட்டனர். இதைக் கண்டு அம்பிகை தன் நெற்றியிலிருந்து அழகிய தேவியான காளி என்பவளை உண்டாக்கினாள். காளி கரு நிறத்தவள்; கண்களில் நெருப்புப் பொறி பறக்க, கையில் கத்தியைக் கொண்டு, கழுத்தில் மனிதர்களின் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து நுனி நாக்கை நீட்டிக் கொண்டு கண்டவர் அனைவரும் நடுங்கிட நிமிடத்தில் அத்தனை படைகளையும் வெற்றிலை மெல்வதுபோல மென்றாள் காளி.
சுற்றிலுமிருந்தவர்களைச் சூரணமாக்கி மற்றைய அசுரர்களைப் பற்றியிழுத்து பட்சணம் செய்தாள். படைகள் அனைத்தையும் வாயிலிட்டுச் சீடை முறுக்கு தின்பது போல் நெறு நெறு என்று கடித்தாள். சிலரின் தலை மயிரைப் பிடித்து இழுத்தாள்; சிலரின் கழுத்தினை நெரித்தாள்; சிலரின் குடலைப் பிடுங்கி வெளியில் எடுத்தாள். இப்படிக் கையினால் அடித்தும் தரையில் தள்ளியும்; பொசுக்கியும்; துடிக்கத் துடிக்க உதைத்தும்; கத்தியால் வெட்டியும்; பம்பரமாய்ச் சுற்றியும் அனைவரும் நடுங்கச் சண்டையிட்டாள்.
இந்தப் பேரழிவைக் கண்ட சண்டனும் முண்டனும் ஓடிவந்து வில்லை வளைத்துச் சரமாரியாக அம்பு மழை பொழிந்தனர். காளியானவள் அவர்கள் பயன்படுத்திய படைக்கலங்கள் அனைத்தையும் வாய்க்குள்ளே போட்டுப் பயன் இல்லாமல் போகுமாறு செய்தாள். முடை நாற்றம் வீசும் சண்டமுண்டர்களின் தலைகளை கத்தியால் வெட்டி எறிந்தாள். அந்த இரண்டு தலைகளையும் இரு கைகளிலும் எடுத்துக் கொண்டு கண்டவர்கள் கிலி பிடிக்க அட்டகாசம் செய்து நின்றாள்.
காளியைக் கண்ட அம்பிகை, “நீ சண்டமுண்டர்களின் தலைகளைக் கொண்டு வந்ததால் இனிமேல் இவ்வுலகம் உன்னைச் “சாமுண்டி” என்ற சக்தி தேவதையாக வணங்குவர்” என்றாள். இங்ஙனம் சண்டிகையும் நெற்றிக்கனலில் பிறந்த காளி அன்று முதல் சாமுண்டி என்று பெயர் பெற்றாள். இந்தச் சாமுண்டியை ஈசுவரியாக வழிபடுவதை மைசூரில் காணலாம்.
சண்டமுண்டர் வதம் கேட்ட சும்பன் கடுங்கோபம் கொண்டான். அரக்கர் சேனைகளைக் காளியோடு போர் புரிய ஆணையிட்டான். சும்பனின் கட்டளையை நிறைவேற்ற 86 கோடி அசுரர்கள் போருக்கு எழுந்தனர். அந்தப் பெரும்படை தன்மேல் போருக்கு வருவதைக் கண்ட சண்டிகை தன் கைவில்லை வளைத்தாள்; சிங்கமும் சீறி எழுந்தது; அசுரர்கள் சிங்கத்தையும் சண்டிகையையும் சூழ்ந்து நின்று சண்டையிட்டனர். அப்போது சப்த சக்திகளும் அம்பிகைக்குத் துணையாகப் போரிடலாயினர்.
சப்தசக்திகள் யார்? ‘பிரும்மாணி’ அன்னவாகனத் தேரிலேறி கமண்டலம் ஸ்படிகமணி மாலை இவற்றைக் கொண்டு நின்றாள்.
‘மகேசுவரி’ புலித்தோலை உடுத்திக் கொண்டு நெற்றியில் பிறை அணிந்து, நாகங்களை நகையாகப் பூண்டு, கையில் திரிசூலம் ஏந்தி வெள்ளை ரிஷபத்தில் ஏறி வந்தாள்.
‘கௌமாரி’ கையில் வேலினைக் கொண்டு மயில் மீது துள்ளி வந்தாள்.
‘வைஷ்ணவி தேவி’ கையில் சங்கு சக்கரம் கத்தி, கதை, சார்ங்கம் என்ற பஞ்சாயுதங்களை ஏந்தி கருடன் மீது துணையாக வந்தாள்.
வாராகிதேவி பெண் பன்றியின் முகம் கொண்டு போரிட வந்தாள். நரஸிங்கி தேவியும் நரசிம்ம மூர்த்தியின் உக்ர உருக் கொண்டு பிடரி மயிர் சிலிர்க்க உதறி கத்தி, கதைகளைக் கொண்டு சண்டையிட வந்தாள்.
ஐந்தரியும் ஐராவதமாகிய வெள்ளை யானை மீதேறி வஜ்ராயுதத்தைக் கொண்டு போரிட வந்தாள். இந்த ஏழு பேரும் அம்பிகையிடமிருந்து போரிட வர, அம்பிகையின் உடலிலிருந்து ஒளி வீசும் ஒரு தேவி உதித்தாள். அவள் நூறு நரிகள் கூடி ஒலி செய்தால் எப்படி இருக்குமோ அதைப் போல பேரொலி செய்து சிவபெருமானை அழைத்தாள். அவளது அழைப்பைக் கேட்ட சிவன் ஓடோடி வந்தார். தேவியானவள் ஈசானனாகிய சிவனை சும்ப நிசும்பனிடம் தூது செல்லுமாறு அனுப்பினாள். சும்ப நிசும்பனிடம் “தேவர்களை உடனே சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்; இந்திரனுக்கு அரசாட்சி அளிக்க வேண்டும்; இல்லையேல் போரில் இறந்து போவீர்கள்” என்று செய்தி சொல்லி அனுப்பினாள்.
அம்பிகையானவள் சிவனையே தூது செல்ல அனுப்பியதால் அன்று முதல் ‘சிவதூதி’ என்று அழைக்கப்பட்டாள். தேவீ சொன்னவாறு சிவனும் சென்று தூது சொல்ல அது கேட்ட அசுரர்கள் கத்தி, வேல், அம்பு, தடி, சூலம், கலப்பை, உலக்கை, குந்தம் முதலான பல படைக்கலங்களையும் கொண்டு வந்து தேவியுடன் போரிட்டனர்.
தேவி வெகுண்டு வில்லை வளைத்தாள். அவளுக்கு முன் காளி வந்து தாவித் தாவிக் குதித்து கத்தியாலும் வாளினாலும் அசுரர் உயிர்களைக் குடித்தாள். பிரும்மாணி கமண்டல நீரை அள்ளித் தெளித்து அரக்கர்களை அழித்தாள்; மகேசுவரி சூலத்தாலும்; கௌமாரி வேலாலும்; வைஷ்ணவி சக்கரத்தாலும், ஐந்திரி வஜ்ரத்தாலும் அடிக்க அசுரர்களின் ரத்தம் புரண்டோடியது. வாராகி தேவி அசுரர்களை மூக்கினால் குதறியும் குளம்பினால் மிதித்தும் பலரின் உயிரைப் போக்கினாள்.
நரஸிங்கி தேவி தன் நகங்களால் கிழித்து குடல்களை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டாள்; பற்களால் கடித்தாள்; எழுந்தவர்களைக் காலால் மிதித்துத் தரையில் அறைந்தாள். இப்படி சப்தமாதர்களும் (சப்த சக்திகளும்) சமர்க்கோலம் பூண்டு வெற்றியடைந்தனர். சப்த மாதர்களின் செயல்களையும் வெற்றியையும் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரக்தபீஜன் என்ற அசுரன் போருக்கு வந்தான்.
ரக்தபீஜன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு ரத்தச் சொட்டும் உடனே ரக்த பீஜர்களாய் மாறி நிற்கும். ஆகையால் ஐந்திரி தேவி அவனை வஜ்ராயுதத்தால் அடித்தபோது அவன் உடம்பிலிருந்து கொட்டிய ரத்தம் ஆயிரம் ரத்தபீஜர்களாகக் கிளம்பியது. அவர்கள் அனைவரும் வலுவுடன் போரிடக் கிளம்பினர். இதைக்கண்ட வைஷ்ணவிதேவி அவர்களைச் சக்கரத்தால் அடித்தாள்; வாராகி தேவி கத்தியால் குத்தினாள்; மகேசுவரி தேவியும் கௌமாரி தேவியும் சூலத்தாலும், வேலாலும் மாறி மாறி அடிக்க, ரக்த பீஜர்களின் ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓட அதிலிருந்து கோடிக்கணக்கான ரக்தபீஜர்கள் தோன்றினர்.
இதனைக் கண்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் கலங்கி நடுநடுங்கி அம்பிகையைப் பார்த்து, “சாமுண்டி தேவியே! உன் வாயை அகலமாகத் திற; பூமியின் மீது விழும் ரத்தத்தை விழுவதற்கு முன் குடித்துவிடு; இறந்து விழும் ரக்தபீஜர்கள் மீண்டும் அவர்கள் பிறப்பதற்கு முன் அவர்களைக் கபளீகரம் செய்து விடு” என்று வேண்டினர்.
இதைக் கேட்ட ரக்தபீஜன் மிகுந்த சினத்துடன் சண்டிகையை கதையால் சாடினான். ஆனால் தேவிக்குத் துளிகூடக் கெடுதல் இல்லை. ஏனெனில் செங்குருதி குடித்து உற்பவிக்கும் ரக்தபீஜர்களைத் தின்று விட்டாள் ஆங்காலக்காளி. ரத்தம் துளி மிச்சமின்றிக் காளியும் குடிக்கவே நிலைதடுமாறி பூமியின் மேல் ரக்தபீஜனும் பிணமாக விழுந்தான். ரக்தபீஜன் பிணமாக விழுந்ததைக் கண்ட சப்தமாதர்கள் களிப்பினால் நடனமாடினர். உம்பர்கள் களிப்பினால் பாடி ஆடினர்.
ரக்தபீஜன் சண்டிகையால் வதஞ்செய்யப்பட்டான் என்பதை அறிந்த நிசும்பன், சும்பன் இருவரும் போருக்கு வந்தனர். சும்பனுடைய தம்பி நிசும்பன் கத்தியை எடுத்துச் சிங்கத்தைக் குத்தினான். சப்தமாதர்கள் கண்ணால் காணும்படி தேவி நிசும்பனுக்கு எதிரே கத்தியைச் சுழற்றினாள். அவனுடைய கத்தியையும் விரலையும் அறுத்துத் துண்டாக்கினாள். கோடரியை எடுத்துக் கொண்டு நிசும்பன் ஓடி வந்தான். தேவி பாணத்தினால் அடிக்க அவன் மாடு போல விழுந்தான். அப்போது காளி பூமியில் தூளி எழுமாறு கையில் ஓங்கி அறைந்தாள். எல்லாருடைய காதும் செவிடாயிற்று. அதைப் பார்த்த சிவதூதியாகிய துர்க்கை சண்டிகை அட்டகாசமாய்ச் சிரித்தாள். அப்போது சும்பன் எட்டுத் திசையும் கிடுகிடுக்க ஏழுலகும் நடுநடுங்க அம்பிகையின் மீது ஒரு வேலை ஏவினான். தேவி அதை ஒரு கொள்ளியால் அடித்து சுக்கு நூறாக்கினாள். சிங்கம் கர்ஜனை செய்தது. சும்பனும் சிம்மநாதம் செய்தான். அதற்குள் நிசும்பன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். அப்போது சக்கரத்தைச் சுழற்றி, கைச்சூலத்தால் அவன் மார்பைப் பிளந்தாள்.
நிசும்பன் இறந்ததைக் கண்ட சும்பன் வெகுண்டெழுந்தான். அனல் பொறி பறக்க அம்பிகையைப் பார்த்து, “ஏய்..சண்டி..! நீ தனிப்பட்டவளாகப் போரிடவில்லையே..மற்றவர்களின் பலத்தினால் அல்லவா வென்றாய்? தைரியம் இருந்தால் என்னுடன் நேராகத் தனித்து நின்று போர் செய். பார்க்கலாம்” என்று கூறிக் கொண்டே தேவியின் மார்பில் அடிக்க வந்தான். உடனே தேவி சும்பனைப் பார்த்து “அடே, துஷ்டா! இந்த உலகில் என்னைத் தவிர வேறு எவருமில்லை. இங்கு நிற்பவர்கள் எல்லாரும் என்னுடைய சக்திகளே!” என்று சொன்னாள். அவனுடைய கண்ணெதிரிலேயே அம்பிகையின் உடலுக்குள்ளே அத்தனை தேவியரும் லயமாகிவிட்டார்கள்.
சக்திகள் அனைவரும் தேவிக்குள் அடங்க அம்பிகை சும்பனோடு போரிடலானாள். தேவி அவன் மார்பில் ஒரு கணையால் அடிக்க சும்பன் அலமந்து கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் சும்பன் அம்பிகையைத் தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறந்தான். அவனது பராக்கிரமத்தைக் கண்ட தேவி அவனைக் கரகரவென்று பம்பரமாய்ச் சுழற்றிப் பூமியில் எறிந்தாள். அவன் எழுவதற்குள் சூலத்தினால் அவனைக் குத்த சும்பன் மாண்டான்.
குவலயம் முழுவதும் குதூகலம் கொண்டது. தேவர்கள் மகிழ்ந்து அம்பிகையைக் கொண்டாடினர்; கந்தர்வர்கள் வீணாகானம் இசைத்தனர். அப்ஸரஸ் ஸ்த்ரீகள் ஆடலாயினர்; மங்கல வாத்தியங்கள் முழங்கலாயின.
“நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை” என்று தேவர்கள் திரும்பத் திரும்ப வணங்கினர். நாமும் அம்பிகையை வணங்குவோம். எப்படி?
மதுகைடப வதம் நம்முள் நடக்க வேண்டும். மது-சிற்றின்பம். இது தற்காலிகமானதேயாகும். சிற்றின்பம் அதர்மத்தில் தள்ளுகிறது. தர்மத்தை மறக்கச் செய்கிறது. வெளியுலகிற்காகப் பெயரளவில் தர்மத்தைக் கடைப்பிடிப்பதைப் போலக் காட்டிக் கொள்வது; அதாவது வெறும் புழு போல் (கீடபம்-புழு) இருத்தல். கீடபமானது தான் கைடபம் ஆயிற்று. மது கைடபத் தூண்டுதலே பாபம் புரியக் காரணமாகும்.
மகிஷாசுர சைன்யம் வதம் நிகழ வேண்டும். இயற்கை உந்துதல்களையும் இந்திரிய இன்பங்களையும் வெல்ல வேண்டும். மகிஷாசுரவதம் - நம்மை விஞ்சியவர் கிடையாது என்ற மமதையில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு செயல்படுவதை விட வேண்டும். தூம்ரலோசனனை வதம் செய்தாக வேண்டும். புகையைப் போன்று நமக்குள் எழும் அடுக்கடுக்கான ஆசைகள், பொறாமைகள் ஆகியவற்றை விட்டு ஒழிக்க வேண்டும்.
சண்ட முண்டன் வதம் கன்மம் மாயை இதிலிருந்து விடுபட வேண்டும். அதற்கு நாம் மகான்கள் இல்லை. அப்படியானால் என்ன செய்யலாம்? பிதிர் கடன், இறைவழிபாடு ஆகியவற்றையாவது முறையாகச் செய்ய வேண்டும்.
ரக்தபீஜன் வதமாகிய ஆணவத்தை (தலை தூக்கிக் கொண்டே இருக்கக் கூடியது.) விட்டொழிக்க வேண்டும்.
நிசும்ப, சும்பன் வதமாக, ஸ்ரீராம கிருஷ்ணர் கூறி வாழ்ந்து காட்டியதைப் போல் பழுக்காத நான் என்பதிலிருந்து பழுத்த நான் என்பதற்கு வர வேண்டும். அதற்குப் பூரணமாக அம்பிகையை சக்தியைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை என்று அர்ப்பணிக்க வேண்டும்.
இங்ஙனம் தேவியின் வெற்றியை நினைத்து அவளையும் அவளுக்கு உதவிய அவளது அம்சமாகிய சப்தமாதரையும் தியானம் செய்பவர்களுக்கும் அவள் சரித்திரத்தைச் சொல்பவர்களுக்கும் அவள் சரித்திரத்தைக் கேட்பவர்களுக்கும் ஒரு நாளும் தீது அணுகாது; தோல்வி கிட்டாது; நோய் நொடி அணுகாது; ஆபத்து வராது. விபத்து நேராது; வறுமை வராது. பகை பெருகாது; செல்வம் பெருகும்; மறுமாசு கிட்டாது; மனம் நோகாது; தன்னைச் சேர்ந்தவர்களுக்கு அல்லல் நேராது; நீரினாலும் நெருப்பினாலும் விபத்து நேராது; திருடர் பயம் அணுகாது; சுருங்கக் கூறின் கோரக் கலிகாலத்தின் கொடுமை ஏதும் நேராது.
தியானம்
மது கைடபர்களை வதம் செய்து நின்றோய்!
மகிடன் எனும் எருமையைச் சாடியே கொன்றோய்!
அதிரவரும் தூம்ரனை அரைநொடியில் வென்றோய்!
சண்டனையும் முண்டனையும் பந்தாடி நின்றோய்!
உதிர பீஜன் உதிரம் ஒரு நொடியில் குடித்தோய்!
ஓங்கிவரும் சும்பனை ஆங்கு உயிர் எடுத்தோய்!
எதிரில் வரும் நிசும்பனைக் கொன்றாவி முடித்தோய்!
எமக்கருள்க துர்க்கையே! அம்பிகையே!

கள்ளழகர் வரலாறு

மதுரைக்கு வடக்கே ஏறத்தாழ இருபது கி.மீ. தொலைவில் இருக்கிறது அழகர் கோவில். அங்கு வீற்றிருக்கும் கடவுளை ‘சுந்தரராஜப் பெருமாள்’ என்று அழைக்கிறார்கள். இக்கோவில் மலை அடிவாரத்தில் இருக்கிறது. இம்மலைக்கு திருமாலிருஞ்சோலை, சோலைமலை, திருமாலிருங்குன்றம், வளகிரி, விருஷபாத்திரி, இடபகிரி என்று பல பெயர்கள் உண்டு. இம்மலைத் தொடர் கிழக்கு மேற்காகப் 15 கி.மீ. நீளமும், ஆயிரம் அடி உயரமும் கொண்டது. இதிலிருந்து பல சிறிய மலைகள் நாலாபுறமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புற அடிவாரத்தில் தான் ‘அழகர் மலை’ உள்ளது. இவ்வழகருக்கு ‘கள்ளழகர்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சுந்தரம் என்றால் ‘அழகு’ உள்ளவர் என்று பொருள். பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் என்பதால் சுந்தரராஜப் பெருமாளை, ‘கள்ளழகர்’ என்று அழைக்கிறார்கள்.
இந்த மலைக்கோவிலுக்கும், இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாறளுக்கும் புராண, சரித்திரக் கதைகள் உள்ளன. புராண கதை மூலமாக நாம் அறிவது என்னவென்றால், ஒரு சமயம் தர்ம தேவன் இந்தப் பூமியில் உள்ள எல்லாப் புண்ணிய க்ஷேத்திரங்களையும் தரிசித்துக் கொண்டு வரும்போது இந்தச் ‘சோலை மலை’யை அடைந்தான். இங்குள்ள இயற்கைச் சூழலில் மனத்தைப்பறிகொடுத்த அவன் இங்கு தங்கித் தவம் செய்தான். அவனுடைய தவ முடிவில், மஹாவிஷ்ணுவாகிய ‘சுந்தரராஜப் பெருமாள்’ மனம் மகிழ்ந்து அவருக்குத் தரிசனம் அளித்தார். மேலும், தர்மதேவன் வேண்டுகோளுக்கிணங்கி சுந்தரராஜப் பெருமாளைப் பூஜிப்பதற்காக நூபுர கங்கையில் ஓர் ஆலயம் அமைத்து வழிபாடு செய்வதற்கு அனுக்ரஹம் செய்தார். அவர் விருப்பப்படியே நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக எழுந்தருளி, இன்றைக்கும் மக்கள் குறைகளை நீக்கி, அனுக்ரகம் செய்து வருகிறார். மலைக்கு மேல் இரண்டு கி.மீ. தொலைவில் ‘சிலம்பாறு’ ஓடுகிறது. இதை ‘நூபுர கங்கை’ என்றும் சொல்லுவர்.
“ஆயிர முகங்களைக் கொண்ட நூபுரமிரங்கு கங்கை
ஆறமர வந்தலம்பு துறை சேர.....
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற-
சோலைமலை வந்துகந்த பெருமாளே....”
என்று நூபுரகங்கையையும், சோலை மலையையும் இணைத்துப் பாடுகிறார் புலவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த நூபுர கங்கை உண்டான கதையை நோக்குவோம்.
ஒரு சமயம் மலையத்துவஜன் என்ற பாண்டிய அரசன் மேரு மலைக்குத் தெற்கில் உள்ள எல்லா அரசர்களையும் ஜெயித்து, மேருவில் (மலையில்) தன் பெயரைப் பொறித்து வந்தான். மதுரையில் அகஸ்திய முனிவரைத் தன் மந்திரியாக்கிக் கொண்டு ஆயிரம் வருடம் ஆண்டு வந்தான். மலையத்துவஜன் அகஸ்தியருடைய அருளால் ஒரு புஷ்பக விமானத்தைப் பெற்று, தினமும் அதில் பறந்து சென்று, கங்கையில் மூழ்கி, கயாவிலுள்ள மகாவிஷ்ணுவைத் தரிசித்து மதுரைக்குத் திரும்புவான். ஒருநாள் அவனுடைய புஷ்பக விமானத்தின் நிழல், விருபாத்திரியின் மீது விழ, அந்த நிழலைக் கொண்டே அங்கிருந்த பெரியவர்கள் அதனைக் கீழே இழுத்தனர். அப்போது வானத்திலிருந்து அசரீரியாக ஒரு குரல் கேட்டது. இறைவனே, இராஜனை நோக்கி “இம்மலையில் என் பாதச்சிலம்பிலிருந்து பெருகி வரும் ‘சிலம்பாறு’ கங்கையை விடப் புனித மாக இருக்க, இதில் ஸ்நானம் செய்து உன் பாபங்களைப் போக்கிக் கொண்டு என்னையும் பூசித்திருக்கலாமே. மேலும் தர்ம தேவனும், பல முனிவர்களும் என்னைப் பூசித்து நன்மை யடைந்திருக்கிறார்கள். நீயும் அப்படியே செய்து பயனடையலாமே” என்று கூறினார். இறைவனின் ஆணைப்படியே அரசன் அங்கேயே தங்கி பெருமாளுக்கு சேவை செய்தான் என்று கூறப்படுகிறது.
ஆனால் சரித்திர வரலாற்றுப்படி நாம் நோக்கினால், பாண்டியர் ஆட்சி தொடங்கிய முதலே ‘அழகர்’ கோவிலும், அதனை அடுத்து ‘அழகாபுரி’ என்ற ஊரும் புகழ் பெற்று விளங்கின. அழகாபுரிக் கோட்டை மதிலுள்ளே ‘அழகர்’ கோவிலும் அடங்கியிருக்கிறது. இந்த ஊரையும் கோவிலையும் நிர்மாணித்தவர்கள் தர்ம தேவதையும், விஸ்வகர்மாவும் ஆவர். பின்னர் பாண்டிய மன்னன் மலையத்துவஜன் இவற்றைப் புதுப்பித்தான் என்று கூறப்படுகிறது. பாண்டிய அரசையும் வம்சத்தையும் ஸ்தாபித்தவனின் மகன் மலையத்துவஜன். சோழகுலச் செம்மல் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையை மணம் புரிந்து கொண்டான். இவர்களுடைய மகளே ‘மீனாட்சி’ என்று துதிக்கப்படும் ‘அங்கயற்கண்ணி’ அம்மன் ஆவார். தந்தைக்குப் பின் பாண்டிய நாட்டை ஆண்ட பெண்ணரசி இவர்தாம்.
இக்கோவிலில் மூலவர் ஸ்ரீபரமஸ்வாமி, பஞ்சாயுதங்களோடும், ஸ்ரீதேவி, பூதேவி இருபுறமிருக்க எழிற் கோலத்துடன் திவ்யாலங்கார சேவை சாதித்த வண்ணம் இருக்கிறார். மற்ற விஷ்ணு தலங்களில் காணாத புதுமை என்னவென்றால் இம்மூர்த்தியின் கையிலுள்ள சக்கரமானது, பிரயோகிக்கும் தோரணையிலேயே இருப்பதுதான்.
இப்பெருமாளின் உற்சவமூர்த்திக்குத்தான் ‘அழகர்’ என்றும் ‘சுந்தரராஜன்’ என்றும் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன. இந்த மூர்த்திக்கு நூபுர கங்கையிலிருந்து கொண்டு வரப்படும் நீரால் தான் அபிஷேகம் செய்யப்பட வேண்டும். மற்ற நீரால் அபிஷேகம் செய்தால் அந்த விக்ரகம் கறுத்து விடக்கூடிய அதிசயம் நிகழும். திவ்யபிரபந்தத்தில் இந்த உற்சவ மூர்த்தியை (அழகர்) சோலைமலைக்கரசன் என்று போற்றிப் பாடியுள்ளார்கள். ஆழ்வார்களின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்தியாவிலேயே இரண்டு கோவில்களில்தான் ‘அபரஞ்சி’ என்ற உயர் ரகத் தங்கத்தால் செய்த உற்சவ மூர்த்தி இருக்கிறது. ஒன்று அழகர் கோவிலும் மற்றது திருவனந்தபுரத்தில் உள்ள உற்சவமூர்த்தியும் ஆகும்.
கர்ப்பக்கிரகத்திற்கு அடுத்துள்ள பிராகாரத்தில் வலம்புரி விநாயகர் சந்நிதி இருக்கிறது. வடக்குப் பிராகாரத்தில் விஸ்வக்சேனர் ஸ்ரீஜயதேவி என்னும் தேவியுடன் காட்சியளிக்கிறார். இவரை அடுத்து இருப்பவர் ‘ஹேமதபாலகர்’ என அழைக்கப்படும் பைரவர் சந்நிதி. இந்த பைரவர் நீளமான தந்தங்களுடன், கோரைப்பற்களுடன், திரி சூலத்துடன், நாய் வாகனத்துடன் தரிசனம் தருகிறார். விருஷபாத்ரி மகாத்மியத்தில் க்ஷேத்திரபாலகராக சிவன் இக்கோவிலில் இடம் பெற்றிருக்கிறார் என்றும் சிவபெருமான் விஷ்ணுவைக் குறித்து தவம் செய்த இடம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த க்ஷேத்திர பாலகர் சந்நிதிக்கு முனையதரயன் திருமண்டபம் என்றும் சிறப்புப் பெயர் உண்டு.
மேலும் இக்கோவிலில் தனித் தனி சந்நிதிகள் கடவுளுடன் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீகல்யாண சுந்தரவல்லி, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீசுதர்சனர், யோக நரசிம்மர், பார்த்தசாரதி, மண்டூக மகரிஷி, அஷ்டபுஜ கிருஷ்ணர், நர்த்தன கிருஷ்ணர், சரஸ்வதி, தசாவதாரம், திருப்பள்ளியறை நாச்சியார், ஆழ்வார்கள், இராமானுஜர் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றன.
இக்கோவிலில் முக்கியமானது ‘சாளக்கிராம’ தரிசனம். இது காண்பதற்கு நிச்சயம் தவிர்க்கக்கூடாத ஒன்று. இவை இங்கு நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. தினமும் அபிஷேகம் செய்த தீர்த்தம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அழகர் மலையில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி குறிப்பிடத்தக்க தரிசனம் செய்ய வேண்டிய மற்றொரு தெய்வம். அவருக்கு வடிவம் இல்லாவிட்டாலும் பதினெட்டு படிகளுக்கு மேல் அவர் இருந்து இந்தத் தலத்தைக் காவல் புரிவதாக ஐதீகம். இராஜகோபுர வாசல் எப்போதும் மூடியிருக்கும். கருப்பண்ணசுவாமியின் சந்நிதிக்கு வடக்கேயுள்ள வாசல் வழியாகவே கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
அழகர் கோவிலில் அழகர் திருவிழா ஒன்பது நாள்கள் நடக்கும் வைபவம். அழகர் வைகை ஆற்றில் இறங்கும் தெய்விகச் சம்பவம் மதுரை மாநகருக்குச் சிறப்பு தரும் அற்புத விழா. அண்ணன் திருமால் (அழகர்) பற்றி அறிந்த நாம் தங்கை மீனாட்சியை (பாண்டிய அரசி)ப் பற்றியும், அவளுடைய திருமணத்தைப் பற்றியும் இனி நோக்குவோம். மதுரை என்ற பெயரைக் கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது இரண்டு விஷயங்கள்தாம். ஒன்று அவ்வூரில் நடுநாயகமாய் விண்ணளாவ உயர்ந்து நிற்கும் மீனாட்சி அம்மன் ஆலயம். மற்றது பாண்டிய மன்னர்களால் வளர்க்கப்பட்ட சங்கத்தமிழ். இனி கள்ளழகருக்கும், மீனாட்சி கல்யாணத்திற்கும் உள்ள உறவைக் (தொடர்பை) காண்போம்.
பாண்டிய அரசன் மலயத்துவஜன், சோழகுலச் செம்மல் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையை மணம் புரிந்து கொண்டான். அவர்களுக்கு மகப்பேறு இல்லாததால் புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். அச்சமயம் யாக குண்டத்தினின்று பேரழகு வாய்ந்த ஆடும் பொற்சித்திரம் ஒன்று, மூன்று வயது நிரம்பிய மூன்று தனங்கள் கொண்ட பெண் மகவு வடிவில் அன்னை காஞ்சனமாலையின் மடிமீது வந்தமர்ந்தது. அன்னை பராசக்தியே அருந்தவச் செல்வியாக அவதரித்துள்ளதை அறிந்தான் பாண்டிய அரசன். ஆனால் மனம் கலங்கினான். “ஆண் மகவு அல்லவா நாம் கேட்டோம்? பெண் குழந்தையல்லவா கிடைத்துள்ளது! அதுவும் மூன்று தனங்களுடன் காணப்படுகிறதே! என் செய்வேன் இறைவா!” என்று புலம்பினான். அவ்வேளை விண்ணொலி ஒன்று தெளிவுறக் கேட்டது; அதுவும் சிவனாரின் திருவருள்தான்! “மலையத்துவசா! மனம் கலங்காதே; மகனுக்குப் புரிவது போலவே மகளுக்கு எல்லா வித்தைகளும் கற்றுக்கொடு. எல்லாச் சடங்குகளும் செய்து தடாதகை எனப்பெயர் சூட்டுவாயாக! முடிசூட்டு விழாவும் செய்யக்கடவாய்! தக்க மணவாளன் வரும்போது ஒரு தனம் மறைந்து விடும்” என்று அத்திருவாக்கு விசும்பினின்றும் இசைந்தது.
பின்னர் தெய்வ வாக்குப்படி தடாதகைக்குத் திருமுடி சூட்ட வேண்டி, அறிவில் முதிர்ந்த அமைச்சர் சுமதியின் உதவியோடு மிகவும் சிறப்பாக இவ்விழாவை மலையத்துவசன் நடத்தி வைத்தான். அதன் பிறகு சில நாள்கள் கழித்து மலையத்துவசன் சிவனடி நிழலை அடைந்தான். பிராட்டியார் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை முறைப்படி செய்து முடித்தார். பாண்டியநாடு பெண்ணரசியின் நல்லாட்சியில் தழைத்தோங்கிற்று. மனுநீதி முறைப்படி மன்னுயிர்களைத் தன்னுயிர் போல் காத்து வந்தாள் பாண்டியரசி. வீரத்திலும் சிறப்போடு விளங்கினாள் பாண்டியகுமாரி. சதுரங்க சேனையோடு எட்டு திசையிலும் வென்று மீன் கொடி நாட்டினாள் மீனாட்சி. விஷ்ணுவும், பிரம்மனும் சகோதரர்களாகி விட்டதால் தங்கையோடு போர் செய்ய மறுத்துவிட்டார்கள். பின்னர் திருக்கயிலைக்குச் சென்று முக்கண்ணன் சிவ பெருமானுடன் போர் செய்ய முற்பட்ட போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அதே சமயம் மீனாட்சி ஐயனை நோக்கினாள். அண்ணலும் நோக்கினார். இது பூர்வத்தே இணைந்த பந்தமன்றோ? அக்கணமே மகாசக்தியின் ஒரு தனம் மறைந்தது. பெண்மைக்குரிய உணர்ச்சிகள் மேலிட்டன. நாணமும், மடமும் நங்கையை நாடின. இவற்றைக் கவனித்த அமைச்சர் சுமதி, ஈசன் ஆகிய இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். “அன்னையே! ஆதிப்பரம்பொருளான இந்த அகிலாண்ட ஈஸ்வரனே தங்கள் மணவாளன்” என்று கூறினார்.
இந்தக் கல்யாண வைபவத்தைக் காண தங்கைக்கு பிறந்த வீட்டுச் சீர்களுடன் கள்ளழகர் தன் இருப்பிடத்தை விட்டு 12 கி.மீ. பயணம் செய்தார். சித்ரா பௌர்ணமி தினத்தன்று அழகர் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகை ஆற்றை நோக்கிச் சென்றார். அழகர் ஆற்றில் எழுந்தருளியதும் மதுரை ஸ்ரீவீரராகவப் பெருமாள் அவரை எதிர்கொண்டு அழைத்தார். இந்த வைபவம்தான் ஆண்டுதோறும் அழகர் வைகையில் இறங்குவது. மதுரையில் நடக்கும் தன் தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தைக் காண அழகர் வந்த போது வைகையில் வெள்ளம் கரை புரண்டதால் ஆற்றைக் கடக்க முடியாமல், அழகர் வரக் காலதாமதம் ஏற்படவே, அழகர் இல்லாமலே மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கல்யாணம் நடந்து முடிந்தது. மீனாட்சியின் இறந்த தந்தை, திருமால் வடிவில் வந்து தாரை வார்த்துக் கொடுத்து திருமணம் நடந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் கோபம் கொண்ட அழகர் வைகையாற்றில் இறங்கி மதுரைக்குள் வராமல் திரும்பிச் சென்று விட்டதாக வரலாறு கூறுகிறது. கருமைநிற அழகர் பச்சைப் பட்டுடுத்தி வைகையாற்றின் கரையில் எழுந்தருளியதால் நாடு முழுவதும் பசுமையாகவும், செழிப்பாகவும் இருக்கும் என்பது ஐதீகம்.
இந்த மீனாட்சி கல்யாணத்தைக் காண லட்சக்கணக்கான (மக்கள்) பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்து கலந்து கொள்வார்கள். மீனாட்சி அம்மனை, பெருமான் சுந்தரேஸ்வரருக்கு தாரை வார்த்துக்கொடுக்க, மீனாட்சி அம்மன் கழுத்தில் தங்கத்தாலி அணிவிக்கப்பட்டதும், அங்கு திரண்டுள்ள திருமணமான பெண்கள் தங்கள் தாலியில் குங்குமம் இட்டு பக்தி பரவசத்துடன் கண்களில் ஒற்றிக் கொள்வார்கள். மதுரை மீனாட்சி குங்குமம் மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாப் பிணிகளையும் நீக்கி நல்வாழ்வு அளிக்க வல்லது.
அழகர் மலையில் தொடங்கப்படும் திருவிழாவின் நான்காவது, நாளன்று மதுரைக்குப் புறப்படும் அழகர், ஒன்பதாவது நாளன்று மீண்டும் மலைக்குத் திரும்பி விடுவார். அழகர் வைகை ஆற்றின் கரையில் தங்கியிருக்கும் மூன்று நாள்களிலும், இரவு, பகல் பாராமல் மக்கள் ஆயிரக்கணக்கில் திரளுவார்கள். இரவு நேரத்தில் இராமராயர் மண்டபத்தில் நடைபெறும் தசாவதார உற்சவத்தில் தமது மச்ச, கூர்ம, வராக, நரஸிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண அவதாரங்களை விளக்கும் வகையில் கள்ளழகர் பல்வேறு திருக்கோலங்களில் காட்சியளிப்பதைக் கண்டு பக்தர்கள் பரவசம் அடைகிறார்கள். மேலும், இரவில் வாண வேடிக்கைகளும் விளையாட்டுகளும் மிகவும் குதூ கலமாக இருக்கும். இவ்விழாவின் முக்கிய அம்சம், அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்கள் மட்டும் இன்றி பல மைல் தூரத்திலுள்ள கிராமங்களிலிருந்தும் மக்கள் திரளாக வந்து மூன்று நாள்கள் இங்கேயே தங்கி விழாக்களில் கலந்து பங்கு கொண்டு இறைவன் அருள் பெறுவர். மேலும், இந்த விழா, வைகை ஆற்றின் கரையில் சித்ரா பௌர்ணமி சமயத்தில் நடப்பதால், இயற்கையான வெளிச்சமும் குளிர்ச்சியும் நிறைந்து, மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்தோடும் இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.

Thursday, June 18, 2015

துர் மரணமும், ஆவியும் ....உங்களை பாதுகாப்பது எப்படி?

ஆவிகள் சூரியனை நோக்கிச் சென்றால் சொர்க்கம்!
சந்திரனை நோக்கிச் சென்றால் வைகுண்டம்!!இங்கு செல்லும் ஆவிகள் மறுபிறவி பிறக்கும்.சனிக்கிரகத்தை நோக்கிச் சென்றால் நரகம்.பல ஆண்டுகள் கடும்வேதனையை அனுபவிக்க வேண்டும்.இதுபற்றிய முழுவிபரம் கருட புராணத்தில் இருக்கின்றது.

[childghost.jpg]
திடீர் விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கே இறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.

நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும்.சுமார் 20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியே எங்கும் செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது.இதைத்தான் மந்திரவாதிகள் பிடித்து தங்களிஷ்டப்படி ஏவல் செய்கின்றனர்.அருளாளர்களின் ஆசி கிடைத்தால் இந்த ஆவிகளுக்கு விடுதலை!

துர்மரணம் அடைந்தவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது.அவர்களை வணங்கக்கூடாது.அவர்களுக்கு படையல் போடக்கூடாது.உச்சாடன கணபதி ஹோமம் மற்றும் பிதுர் ஹோமம் மூலம் அவைகளை வேறிடத்திற்குப் போகச் செய்யலாம்.
 
துர்மரணமடைந்தது வாலிபவயதுப் பையனாக இருந்தால் வாலிப வயதுப் பெண்ணைத் துன்புறுத்தும்.வாலிப வயது பெண்ணாக இருந்தால் வாலிபவயதுப் பையனைத் துன்புறுத்தும்.கைகள், கால்கள் உள்ளங்கால்கள் தொப்புள் ஆகிய இடங்களில் மருதாணி இலையை மட்டும் பிடுங்கி அரைத்துத் தடவி வந்தால் துர் ஆவிகள் தாக்காது.ட்யூப்லைட் வெளிச்சத்தில் துர் ஆவிகள் செயல்பட முடியாது.ஏன் எனில் அதில் பாதரசம் உள்ளது.பிரண்டைத் துவையல், தடியங்காய்(வெண்பூசணி லேகியம்),வெள்ளைப்பூண்டு லேகியம் சாப்பிட்டால் துர் ஆவிகள் தாக்குதல் இராது.

நயம்சாம்பிராணி, வலம்புரிக்காய், கோஷ்டம்,விரலி மஞ்சள் ஆகியவைகளை நன்கு இடித்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் புகைபோட ஆவிகள் ஓடிவிடும். புகைபோட்ட பின் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
ஹாஸ்டல்கள்,அரண்மனைகள்,ஆஸ்பத்திரிகள்,சில வீடுகளில் இப்படிப்பட்ட ஆவிகள் இருக்கும். மாந்திரீகத்தொழில் தெரிந்தவர்கள் மூலமாக பச்சைப்பானைகளில் அடைத்து இவற்றை ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரை, வனங்களில் விட்டால் அந்த ஆவிகளுக்கும் விடுதலை.நமக்கு பெரும் புண்ணியம் தரும் செயலாகும்.

Tuesday, June 16, 2015

ஆவிகள் உலகம்

ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர். ஆனால் இறந்த தங்கள் முன்னொர்களை குல தெய்வமாக வணங்குவர். இல்லாவிட்டால் இறந்தவர்களது நினைவு நாளில் சிலைகளுக்கு மாலையிட்டு, அவர்கள் நினைவாக அன்னதானங்கள் செய்து வணங்குவர். இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது. கடவுள் இல்லை, ஆவிகள் இல்லை என்று கூறுபவர்கள், சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே! வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே! இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர். ’ஆவிகள்’ என்பது பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

ஆவிகள்
 
மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.

ஆவிகள் உலகம்
 
கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.

அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.

ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர். இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் மகரிஷி

ஸ்ரீ தத்தாத்ரேயர்  மகரிஷி 

அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா, கணவனின் மனம் அறிந்து நடக்கும் பதிவிரதை, கணவனிடம் மிகுந்த பக்தி கொண்டவள். இவள், மும்மூர்த்திகளின் தரிசனம் வேண்டி, தவமிருந்தாள். இதையறிந்த மும்மூர்த்திகளும் அவள் முன், துறவிகள் வடிவில் வந்தனர். அவளது பெருமையை உலகறியச் செய்வதற்காக, தங்களுக்கு நிர்வாணக் கோலத்தில் பிச்சையிடும்படி வேண்டினர். கற்புத்தெய்வமான அனுசூயா, தன் கணவர் அத்திரி மகரிஷியை மனதில் நினைத்து, அவர்கள் மீது, அவர் பாதத்தைக் கழுவிய தீர்த்தத்தை தெளித்தாள். உடனே, மும்மூர்த்திகளும், மூன்று குழந்தைகளாயினர். அந்தக் குழந்தைகளை அத்திரி மகரிஷி ஒன்று சேர்த்து, தத்தாத்ரேயன் என்று, பெயரிட்டு வளர்த்து வந்தார்.
ஒரு நாள், காட்டிற்கு வேட்டையாட வந்த, யது என்ற மன்னன், காட்டில் தத்தாத்ரேயர் ஆனந்தமாக இருந்ததைக் கண்டு, ஐயனே... உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கவலையுடன் வாழுந்து வரும் நிலையில், நீங்களோ வெகு ஆனந்தமாக இருக்கிறீர்களே... உங்களுக்கு இத்தகைய ஆனந்த மார்க்கத்தை கற்றுக் கொடுத்த குரு யார், எனக்கும் கூறுங்கள்... என்று, கேட்டான். எனக்கு ஒன்றல்ல பல குருமார்கள் இருக்கின்றனர்.
அதில், இந்த பூமிதான் முதல் குரு; இதனிடமிருந்து பொறுமையையும், பிறருக்கு நன்மை செய்வதையும் கற்றேன்.
தண்ணீரிடமிருந்து, சுத்தத்தைக் கற்றேன்.
 
எல்லாரிடமும் பழகினாலும், யாரிடமும் பற்று வைக்காத குணத்தை, காற்றிடம் படித்தேன்.
 
பரந்து விரிந்திருந்தாலும், எதனிடமும் தொடர்பு இல்லாதது வானம். அந்த தொடர்பற்ற நிலையை ஆகாயமே எனக்கு தெரிவித்தது.
ஒரே சூரியன் என்றாலும், எல்லா குடங்களின் நீரிலும் பிரதிபலிப்பது போல, பல சரீரங்களை ஒரே ஆத்மா எடுப்பதைப் பார்த்தேன்.
 
வேடனின் வலையில் சிக்கிய புறாக்களைப் பார்த்து, தானும் சிக்கிய தாய் புறாவைப் பார்த்து, பாசபந்தமே துன்பத்திற்கு காரணம் என, உணர்ந்தேன்.
 
உணவுக்காக தூண்டிலில் சிக்கிய மீனைப் பார்த்து, ஆசையே சுதந்திரத்தை இழப்பதற்கு காரணம் என்பதை, அறிந்தேன்.
 
தேனீக்கள் சேர்த்த தேனை, யாரோ ஒருவன் கொண்டு போனதைப் பார்த்து, பொருளை தானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன்.
உணவுக்காக அங்கும் இங்கும் அலையாமல் இருந்த இடத்திலிருந்த படியே கிடைக்கும் உணவைக் கொண்டு திருப்தியடையும் மலைப்பாம்பைப் போல், நானும் திருப்திப்பட வேண்டும் என, உணர்ந்தேன்... என்று, அடுக்கிக் கொண்டே போனார்.
பார்த்தீர்களா... இயற்கை நமக்கு நன்மைகளை மட்டுமல்ல, உலகவியல் வாழ்வுக்கும் ஆசானாக இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கருத்தூன்றி பார்ப்பதுடன், பாதுகாக்கவும் செய்யுங்கள்.
மனிதன் இயற்கையை மதிக்கத் தவறியதால் தான், இன்று, மழை பெய்வது அரிதாகி விட்டது. ஆனால், அந்தக் காலத்தில் அப்படி இல்லை. புழு, பூச்சியைக் கூட தன் குருவாக நினைத்தான் மனிதன். கடவுளே மானிடப் பிறப்பெடுத்து, இயற்கையை குருவாக ஏற்று, அதனிடமிருந்து பாடம் கற்றுக்கொண்ட கதை இது