Saturday, June 20, 2015

கள்ளழகர் வரலாறு

மதுரைக்கு வடக்கே ஏறத்தாழ இருபது கி.மீ. தொலைவில் இருக்கிறது அழகர் கோவில். அங்கு வீற்றிருக்கும் கடவுளை ‘சுந்தரராஜப் பெருமாள்’ என்று அழைக்கிறார்கள். இக்கோவில் மலை அடிவாரத்தில் இருக்கிறது. இம்மலைக்கு திருமாலிருஞ்சோலை, சோலைமலை, திருமாலிருங்குன்றம், வளகிரி, விருஷபாத்திரி, இடபகிரி என்று பல பெயர்கள் உண்டு. இம்மலைத் தொடர் கிழக்கு மேற்காகப் 15 கி.மீ. நீளமும், ஆயிரம் அடி உயரமும் கொண்டது. இதிலிருந்து பல சிறிய மலைகள் நாலாபுறமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புற அடிவாரத்தில் தான் ‘அழகர் மலை’ உள்ளது. இவ்வழகருக்கு ‘கள்ளழகர்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சுந்தரம் என்றால் ‘அழகு’ உள்ளவர் என்று பொருள். பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் என்பதால் சுந்தரராஜப் பெருமாளை, ‘கள்ளழகர்’ என்று அழைக்கிறார்கள்.
இந்த மலைக்கோவிலுக்கும், இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாறளுக்கும் புராண, சரித்திரக் கதைகள் உள்ளன. புராண கதை மூலமாக நாம் அறிவது என்னவென்றால், ஒரு சமயம் தர்ம தேவன் இந்தப் பூமியில் உள்ள எல்லாப் புண்ணிய க்ஷேத்திரங்களையும் தரிசித்துக் கொண்டு வரும்போது இந்தச் ‘சோலை மலை’யை அடைந்தான். இங்குள்ள இயற்கைச் சூழலில் மனத்தைப்பறிகொடுத்த அவன் இங்கு தங்கித் தவம் செய்தான். அவனுடைய தவ முடிவில், மஹாவிஷ்ணுவாகிய ‘சுந்தரராஜப் பெருமாள்’ மனம் மகிழ்ந்து அவருக்குத் தரிசனம் அளித்தார். மேலும், தர்மதேவன் வேண்டுகோளுக்கிணங்கி சுந்தரராஜப் பெருமாளைப் பூஜிப்பதற்காக நூபுர கங்கையில் ஓர் ஆலயம் அமைத்து வழிபாடு செய்வதற்கு அனுக்ரஹம் செய்தார். அவர் விருப்பப்படியே நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக எழுந்தருளி, இன்றைக்கும் மக்கள் குறைகளை நீக்கி, அனுக்ரகம் செய்து வருகிறார். மலைக்கு மேல் இரண்டு கி.மீ. தொலைவில் ‘சிலம்பாறு’ ஓடுகிறது. இதை ‘நூபுர கங்கை’ என்றும் சொல்லுவர்.
“ஆயிர முகங்களைக் கொண்ட நூபுரமிரங்கு கங்கை
ஆறமர வந்தலம்பு துறை சேர.....
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற-
சோலைமலை வந்துகந்த பெருமாளே....”
என்று நூபுரகங்கையையும், சோலை மலையையும் இணைத்துப் பாடுகிறார் புலவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த நூபுர கங்கை உண்டான கதையை நோக்குவோம்.
ஒரு சமயம் மலையத்துவஜன் என்ற பாண்டிய அரசன் மேரு மலைக்குத் தெற்கில் உள்ள எல்லா அரசர்களையும் ஜெயித்து, மேருவில் (மலையில்) தன் பெயரைப் பொறித்து வந்தான். மதுரையில் அகஸ்திய முனிவரைத் தன் மந்திரியாக்கிக் கொண்டு ஆயிரம் வருடம் ஆண்டு வந்தான். மலையத்துவஜன் அகஸ்தியருடைய அருளால் ஒரு புஷ்பக விமானத்தைப் பெற்று, தினமும் அதில் பறந்து சென்று, கங்கையில் மூழ்கி, கயாவிலுள்ள மகாவிஷ்ணுவைத் தரிசித்து மதுரைக்குத் திரும்புவான். ஒருநாள் அவனுடைய புஷ்பக விமானத்தின் நிழல், விருபாத்திரியின் மீது விழ, அந்த நிழலைக் கொண்டே அங்கிருந்த பெரியவர்கள் அதனைக் கீழே இழுத்தனர். அப்போது வானத்திலிருந்து அசரீரியாக ஒரு குரல் கேட்டது. இறைவனே, இராஜனை நோக்கி “இம்மலையில் என் பாதச்சிலம்பிலிருந்து பெருகி வரும் ‘சிலம்பாறு’ கங்கையை விடப் புனித மாக இருக்க, இதில் ஸ்நானம் செய்து உன் பாபங்களைப் போக்கிக் கொண்டு என்னையும் பூசித்திருக்கலாமே. மேலும் தர்ம தேவனும், பல முனிவர்களும் என்னைப் பூசித்து நன்மை யடைந்திருக்கிறார்கள். நீயும் அப்படியே செய்து பயனடையலாமே” என்று கூறினார். இறைவனின் ஆணைப்படியே அரசன் அங்கேயே தங்கி பெருமாளுக்கு சேவை செய்தான் என்று கூறப்படுகிறது.
ஆனால் சரித்திர வரலாற்றுப்படி நாம் நோக்கினால், பாண்டியர் ஆட்சி தொடங்கிய முதலே ‘அழகர்’ கோவிலும், அதனை அடுத்து ‘அழகாபுரி’ என்ற ஊரும் புகழ் பெற்று விளங்கின. அழகாபுரிக் கோட்டை மதிலுள்ளே ‘அழகர்’ கோவிலும் அடங்கியிருக்கிறது. இந்த ஊரையும் கோவிலையும் நிர்மாணித்தவர்கள் தர்ம தேவதையும், விஸ்வகர்மாவும் ஆவர். பின்னர் பாண்டிய மன்னன் மலையத்துவஜன் இவற்றைப் புதுப்பித்தான் என்று கூறப்படுகிறது. பாண்டிய அரசையும் வம்சத்தையும் ஸ்தாபித்தவனின் மகன் மலையத்துவஜன். சோழகுலச் செம்மல் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையை மணம் புரிந்து கொண்டான். இவர்களுடைய மகளே ‘மீனாட்சி’ என்று துதிக்கப்படும் ‘அங்கயற்கண்ணி’ அம்மன் ஆவார். தந்தைக்குப் பின் பாண்டிய நாட்டை ஆண்ட பெண்ணரசி இவர்தாம்.
இக்கோவிலில் மூலவர் ஸ்ரீபரமஸ்வாமி, பஞ்சாயுதங்களோடும், ஸ்ரீதேவி, பூதேவி இருபுறமிருக்க எழிற் கோலத்துடன் திவ்யாலங்கார சேவை சாதித்த வண்ணம் இருக்கிறார். மற்ற விஷ்ணு தலங்களில் காணாத புதுமை என்னவென்றால் இம்மூர்த்தியின் கையிலுள்ள சக்கரமானது, பிரயோகிக்கும் தோரணையிலேயே இருப்பதுதான்.
இப்பெருமாளின் உற்சவமூர்த்திக்குத்தான் ‘அழகர்’ என்றும் ‘சுந்தரராஜன்’ என்றும் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன. இந்த மூர்த்திக்கு நூபுர கங்கையிலிருந்து கொண்டு வரப்படும் நீரால் தான் அபிஷேகம் செய்யப்பட வேண்டும். மற்ற நீரால் அபிஷேகம் செய்தால் அந்த விக்ரகம் கறுத்து விடக்கூடிய அதிசயம் நிகழும். திவ்யபிரபந்தத்தில் இந்த உற்சவ மூர்த்தியை (அழகர்) சோலைமலைக்கரசன் என்று போற்றிப் பாடியுள்ளார்கள். ஆழ்வார்களின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்தியாவிலேயே இரண்டு கோவில்களில்தான் ‘அபரஞ்சி’ என்ற உயர் ரகத் தங்கத்தால் செய்த உற்சவ மூர்த்தி இருக்கிறது. ஒன்று அழகர் கோவிலும் மற்றது திருவனந்தபுரத்தில் உள்ள உற்சவமூர்த்தியும் ஆகும்.
கர்ப்பக்கிரகத்திற்கு அடுத்துள்ள பிராகாரத்தில் வலம்புரி விநாயகர் சந்நிதி இருக்கிறது. வடக்குப் பிராகாரத்தில் விஸ்வக்சேனர் ஸ்ரீஜயதேவி என்னும் தேவியுடன் காட்சியளிக்கிறார். இவரை அடுத்து இருப்பவர் ‘ஹேமதபாலகர்’ என அழைக்கப்படும் பைரவர் சந்நிதி. இந்த பைரவர் நீளமான தந்தங்களுடன், கோரைப்பற்களுடன், திரி சூலத்துடன், நாய் வாகனத்துடன் தரிசனம் தருகிறார். விருஷபாத்ரி மகாத்மியத்தில் க்ஷேத்திரபாலகராக சிவன் இக்கோவிலில் இடம் பெற்றிருக்கிறார் என்றும் சிவபெருமான் விஷ்ணுவைக் குறித்து தவம் செய்த இடம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த க்ஷேத்திர பாலகர் சந்நிதிக்கு முனையதரயன் திருமண்டபம் என்றும் சிறப்புப் பெயர் உண்டு.
மேலும் இக்கோவிலில் தனித் தனி சந்நிதிகள் கடவுளுடன் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீகல்யாண சுந்தரவல்லி, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீசுதர்சனர், யோக நரசிம்மர், பார்த்தசாரதி, மண்டூக மகரிஷி, அஷ்டபுஜ கிருஷ்ணர், நர்த்தன கிருஷ்ணர், சரஸ்வதி, தசாவதாரம், திருப்பள்ளியறை நாச்சியார், ஆழ்வார்கள், இராமானுஜர் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றன.
இக்கோவிலில் முக்கியமானது ‘சாளக்கிராம’ தரிசனம். இது காண்பதற்கு நிச்சயம் தவிர்க்கக்கூடாத ஒன்று. இவை இங்கு நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. தினமும் அபிஷேகம் செய்த தீர்த்தம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அழகர் மலையில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி குறிப்பிடத்தக்க தரிசனம் செய்ய வேண்டிய மற்றொரு தெய்வம். அவருக்கு வடிவம் இல்லாவிட்டாலும் பதினெட்டு படிகளுக்கு மேல் அவர் இருந்து இந்தத் தலத்தைக் காவல் புரிவதாக ஐதீகம். இராஜகோபுர வாசல் எப்போதும் மூடியிருக்கும். கருப்பண்ணசுவாமியின் சந்நிதிக்கு வடக்கேயுள்ள வாசல் வழியாகவே கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
அழகர் கோவிலில் அழகர் திருவிழா ஒன்பது நாள்கள் நடக்கும் வைபவம். அழகர் வைகை ஆற்றில் இறங்கும் தெய்விகச் சம்பவம் மதுரை மாநகருக்குச் சிறப்பு தரும் அற்புத விழா. அண்ணன் திருமால் (அழகர்) பற்றி அறிந்த நாம் தங்கை மீனாட்சியை (பாண்டிய அரசி)ப் பற்றியும், அவளுடைய திருமணத்தைப் பற்றியும் இனி நோக்குவோம். மதுரை என்ற பெயரைக் கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது இரண்டு விஷயங்கள்தாம். ஒன்று அவ்வூரில் நடுநாயகமாய் விண்ணளாவ உயர்ந்து நிற்கும் மீனாட்சி அம்மன் ஆலயம். மற்றது பாண்டிய மன்னர்களால் வளர்க்கப்பட்ட சங்கத்தமிழ். இனி கள்ளழகருக்கும், மீனாட்சி கல்யாணத்திற்கும் உள்ள உறவைக் (தொடர்பை) காண்போம்.
பாண்டிய அரசன் மலயத்துவஜன், சோழகுலச் செம்மல் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையை மணம் புரிந்து கொண்டான். அவர்களுக்கு மகப்பேறு இல்லாததால் புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். அச்சமயம் யாக குண்டத்தினின்று பேரழகு வாய்ந்த ஆடும் பொற்சித்திரம் ஒன்று, மூன்று வயது நிரம்பிய மூன்று தனங்கள் கொண்ட பெண் மகவு வடிவில் அன்னை காஞ்சனமாலையின் மடிமீது வந்தமர்ந்தது. அன்னை பராசக்தியே அருந்தவச் செல்வியாக அவதரித்துள்ளதை அறிந்தான் பாண்டிய அரசன். ஆனால் மனம் கலங்கினான். “ஆண் மகவு அல்லவா நாம் கேட்டோம்? பெண் குழந்தையல்லவா கிடைத்துள்ளது! அதுவும் மூன்று தனங்களுடன் காணப்படுகிறதே! என் செய்வேன் இறைவா!” என்று புலம்பினான். அவ்வேளை விண்ணொலி ஒன்று தெளிவுறக் கேட்டது; அதுவும் சிவனாரின் திருவருள்தான்! “மலையத்துவசா! மனம் கலங்காதே; மகனுக்குப் புரிவது போலவே மகளுக்கு எல்லா வித்தைகளும் கற்றுக்கொடு. எல்லாச் சடங்குகளும் செய்து தடாதகை எனப்பெயர் சூட்டுவாயாக! முடிசூட்டு விழாவும் செய்யக்கடவாய்! தக்க மணவாளன் வரும்போது ஒரு தனம் மறைந்து விடும்” என்று அத்திருவாக்கு விசும்பினின்றும் இசைந்தது.
பின்னர் தெய்வ வாக்குப்படி தடாதகைக்குத் திருமுடி சூட்ட வேண்டி, அறிவில் முதிர்ந்த அமைச்சர் சுமதியின் உதவியோடு மிகவும் சிறப்பாக இவ்விழாவை மலையத்துவசன் நடத்தி வைத்தான். அதன் பிறகு சில நாள்கள் கழித்து மலையத்துவசன் சிவனடி நிழலை அடைந்தான். பிராட்டியார் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை முறைப்படி செய்து முடித்தார். பாண்டியநாடு பெண்ணரசியின் நல்லாட்சியில் தழைத்தோங்கிற்று. மனுநீதி முறைப்படி மன்னுயிர்களைத் தன்னுயிர் போல் காத்து வந்தாள் பாண்டியரசி. வீரத்திலும் சிறப்போடு விளங்கினாள் பாண்டியகுமாரி. சதுரங்க சேனையோடு எட்டு திசையிலும் வென்று மீன் கொடி நாட்டினாள் மீனாட்சி. விஷ்ணுவும், பிரம்மனும் சகோதரர்களாகி விட்டதால் தங்கையோடு போர் செய்ய மறுத்துவிட்டார்கள். பின்னர் திருக்கயிலைக்குச் சென்று முக்கண்ணன் சிவ பெருமானுடன் போர் செய்ய முற்பட்ட போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அதே சமயம் மீனாட்சி ஐயனை நோக்கினாள். அண்ணலும் நோக்கினார். இது பூர்வத்தே இணைந்த பந்தமன்றோ? அக்கணமே மகாசக்தியின் ஒரு தனம் மறைந்தது. பெண்மைக்குரிய உணர்ச்சிகள் மேலிட்டன. நாணமும், மடமும் நங்கையை நாடின. இவற்றைக் கவனித்த அமைச்சர் சுமதி, ஈசன் ஆகிய இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். “அன்னையே! ஆதிப்பரம்பொருளான இந்த அகிலாண்ட ஈஸ்வரனே தங்கள் மணவாளன்” என்று கூறினார்.
இந்தக் கல்யாண வைபவத்தைக் காண தங்கைக்கு பிறந்த வீட்டுச் சீர்களுடன் கள்ளழகர் தன் இருப்பிடத்தை விட்டு 12 கி.மீ. பயணம் செய்தார். சித்ரா பௌர்ணமி தினத்தன்று அழகர் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகை ஆற்றை நோக்கிச் சென்றார். அழகர் ஆற்றில் எழுந்தருளியதும் மதுரை ஸ்ரீவீரராகவப் பெருமாள் அவரை எதிர்கொண்டு அழைத்தார். இந்த வைபவம்தான் ஆண்டுதோறும் அழகர் வைகையில் இறங்குவது. மதுரையில் நடக்கும் தன் தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தைக் காண அழகர் வந்த போது வைகையில் வெள்ளம் கரை புரண்டதால் ஆற்றைக் கடக்க முடியாமல், அழகர் வரக் காலதாமதம் ஏற்படவே, அழகர் இல்லாமலே மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கல்யாணம் நடந்து முடிந்தது. மீனாட்சியின் இறந்த தந்தை, திருமால் வடிவில் வந்து தாரை வார்த்துக் கொடுத்து திருமணம் நடந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் கோபம் கொண்ட அழகர் வைகையாற்றில் இறங்கி மதுரைக்குள் வராமல் திரும்பிச் சென்று விட்டதாக வரலாறு கூறுகிறது. கருமைநிற அழகர் பச்சைப் பட்டுடுத்தி வைகையாற்றின் கரையில் எழுந்தருளியதால் நாடு முழுவதும் பசுமையாகவும், செழிப்பாகவும் இருக்கும் என்பது ஐதீகம்.
இந்த மீனாட்சி கல்யாணத்தைக் காண லட்சக்கணக்கான (மக்கள்) பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்து கலந்து கொள்வார்கள். மீனாட்சி அம்மனை, பெருமான் சுந்தரேஸ்வரருக்கு தாரை வார்த்துக்கொடுக்க, மீனாட்சி அம்மன் கழுத்தில் தங்கத்தாலி அணிவிக்கப்பட்டதும், அங்கு திரண்டுள்ள திருமணமான பெண்கள் தங்கள் தாலியில் குங்குமம் இட்டு பக்தி பரவசத்துடன் கண்களில் ஒற்றிக் கொள்வார்கள். மதுரை மீனாட்சி குங்குமம் மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாப் பிணிகளையும் நீக்கி நல்வாழ்வு அளிக்க வல்லது.
அழகர் மலையில் தொடங்கப்படும் திருவிழாவின் நான்காவது, நாளன்று மதுரைக்குப் புறப்படும் அழகர், ஒன்பதாவது நாளன்று மீண்டும் மலைக்குத் திரும்பி விடுவார். அழகர் வைகை ஆற்றின் கரையில் தங்கியிருக்கும் மூன்று நாள்களிலும், இரவு, பகல் பாராமல் மக்கள் ஆயிரக்கணக்கில் திரளுவார்கள். இரவு நேரத்தில் இராமராயர் மண்டபத்தில் நடைபெறும் தசாவதார உற்சவத்தில் தமது மச்ச, கூர்ம, வராக, நரஸிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண அவதாரங்களை விளக்கும் வகையில் கள்ளழகர் பல்வேறு திருக்கோலங்களில் காட்சியளிப்பதைக் கண்டு பக்தர்கள் பரவசம் அடைகிறார்கள். மேலும், இரவில் வாண வேடிக்கைகளும் விளையாட்டுகளும் மிகவும் குதூ கலமாக இருக்கும். இவ்விழாவின் முக்கிய அம்சம், அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்கள் மட்டும் இன்றி பல மைல் தூரத்திலுள்ள கிராமங்களிலிருந்தும் மக்கள் திரளாக வந்து மூன்று நாள்கள் இங்கேயே தங்கி விழாக்களில் கலந்து பங்கு கொண்டு இறைவன் அருள் பெறுவர். மேலும், இந்த விழா, வைகை ஆற்றின் கரையில் சித்ரா பௌர்ணமி சமயத்தில் நடப்பதால், இயற்கையான வெளிச்சமும் குளிர்ச்சியும் நிறைந்து, மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்தோடும் இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.

2 comments: