இல்லங்களில் துளசியை வளர்த்துப் பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம். துளசியின் மஞ்சரியை ஸ்ரீகிருஷ்ணருக்குச் சமர்ப்பிப்பவர் எல்லா விதப் பூக்களையும் சமர்ப்பித்த பலனை அடைவார்கள் என்று ஸ்ரீ பத்ம புராணம் கூறுகிறது.
துளசி இலை, ஹரியின் பூஜையில் சேர்க்கப்படாவிட்டால் அந்தப் பூஜையின் பலன் கிடைப்பதில்லை. மேலும் நிவேதனத்தின் போது துளசியின் ஸ்பரிசம் இருந்தால் மட்டுமே அந்த நிவேதனத்தை இறைவன் ஏற்கிறார். ஆகவே, துளசி தீர்த்தத்தால் மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.
துளசி இலையின்,நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
ஸ்ரீ கிருஷ்ணரை துளசியால் அர்ச்சிப்பவர், தம் முன்னோர்களையும் பிறவித்தளையில் இருந்து விடுவிக்கிறார். துளசி நிறைந்த காட்டுக்குள் பிரவேசிப்பவரது பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகிறது. எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ அந்த இல்லத்தை துர்சக்திகள் அண்டாது.
அதனால் தான் வீட்டு முற்றத்தில் துளசி வளர்க்கும் மரபு உண்டாகியது. மேலும் அந்த இல்லத்தில் வசிப்பவர்களுக்கு யம பயம் கிடையாது. துளசியை வளர்த்து, தரிசித்து, பூஜிப்பதால் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும்.
பூஜையின் போது துளசியை சமர்ப்பித்தால் பக்தி அதிகரிக்கும். துளசிச்செடியின் அடியில் ஸ்ரீ கிருஷ்ணரை வைத்துப் பூஜித்தால் மோட்ச சாம்ராஜ்யம் கிட்டும். துளசியைப் பூஜிப்பது, கங்கா ஸ்நானத்திற்குச் சமமான பலனைக் கொடுக்கும்.
கொடும் பாவங்கள் செய்தவனாயினும், அந்திமக் காலத்தில் துளசித் தீர்த்தம் அருந்தி, துளசித் தளத்தை தலையில் தரித்துப் பின் உயிர் நீக்க நேர்ந்தால், கட்டாயம் முக்தி அடைகிறான். துளசித்தளம், ஸ்ரீவிஷ்ணுவுக்கு மட்டுமின்றி சிவபெருமானையும் பூஜிக்க ஏற்றது.
விநாயகரை துளசியால் பூஜிக்கலாகாது. விரதத்தில் சிறந்ததாகப் போற்றப்படும் ஏகாதசி விரதத்தன்று உபவாசம் இருப்பவர்கள், ஏழு முறை துளசி இலையைச் சாப்பிடலாம். மறுநாள் துளசி தீர்த்தம் அருந்தியே விரதத்தை முடிக்க வேண்டும்.
ஏகாதசி அன்று துளசி பறிக்கக்கூடாது. திருவோண நட்சத்திரம், சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, மாலை வேளை, இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகியப நாட்களிலும், எண்ணை தேய்த்துக் கொண்டும் துளசி பறிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் இறை நாமத்தை உச்சரித்தவாறே பறிக்க வேண்டும். துளசியைப் பறித்து மூன்று நாள் வரை உபயோகிக்கலாம். துளசி மணிமாலை அணிவது உடலை நோய்கள் அண்டாது காக்கும். துளசி மணி மாலையால் செய்யப்படும் ஜபம் பன்மடங்கு பலனைக் கொடுக்கும்.
மூதாதையரின் திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும், துளசிச் செடிகளின் நிழல் படும் இடங்களில் செய்வதாலும் பரிபூரணப் பலன் கிடைக்கிறது. தானங்கள் செய்யும் போது முழுமையான பலன், தானம் செய்யும் பொருளுடன் துளசித் தளம் சேர்த்துக் கொடுப்பதாலேயே கிடைக்கிறது.
சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக வைத்துப் பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும். கார்த்திகை மாதம், சுக்ல பட்ச துவாதசி திதியை `பிருந்தாவன துவாதசி’ என கர்நாடக, மராட்டிய மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள். அன்றுதான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசிக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம்.
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள். நிறைய தீபங்கள் ஏற்றி, பெண்களுக்கு தாம்பூலம், இனிப்பு அளிப்பது வழக்கம். எல்லா நலன்களும் தரும் ஸ்ரீ துளசியைப் பூஜித்து, வெற்றி பெறுவோம்!!!!
No comments:
Post a Comment