Thursday, October 4, 2012

விநாயகர் சிலையை ஏன் மண்ணால் செய்கிறோம்?

விநாயகரைக் குறிக்கும்போது - ‘வினாயகர்’ என்று எழுதக் கூடாது. ‘விநாயகர்’ என்றே எழுத வேண்டும். விநாயகர் என்ற சொல்லுக்கு, தனக்கு மேல் நாயகன் இல்லாதவர்-தானே அனைத்திற்கும் நாயகராய் இருப்பவர் என்பது பொருள். விநாயகரைப் பற்றி எல்லோருக்குமே தெரிந்த ஸ்லோகம்:

‘சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசி வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே’

சுக்லாம்பரதரம் - வெண்மையான பட்டாடையை அணிந்தவர். விஷ்ணும் - எல்லா இடங்களிலும் பரவி இருப்பவர். சசி வர்ணம் - நிலவைப் பார்க்கும்போது, அதில் களங்கத்தைப் போல, ஒரு நிறம் தெரிகிறதல்லவா? அந்த நிறத்தைக் கொண்ட திருமேனியை உடையவர். சதுர்புஜம் - நான்கு திருத்தோள்களை உடையவர். (ஐந்து கரங்கள் கொண்டவர் விநாயகர். ஐங்கரன், ஐந்து கரத்தன் என்றெல்லாம் சொல்கிறோமே! ஆனால் இங்கே இப்படிச் சொல்கிறீர்களே என்று சந்தேகப்பட வேண்டாம். நான்கு தோள்களில் நான்கு திருக்கரங்கள், ப்ளஸ் ஒரு தும்பிக்கை. இதை முன்னிட்டே ஐங்கரன் என்கிறோம்.)

ப்ரஸன்ன வதனம் - சிரித்த முகம் கொண்டவர். இப்படிப்பட்ட விநாயகரைத் தியானித்தால், எல்லா இடையூறுகளும் நீங்கும் என்பதே, அந்த ஸ்லோகத்தின் கருத்து. விக்கினங்களை நீக்கும் அந்த, விநாயகருடைய அவதார நாளையே ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடி வருகிறோம். விநாயகர் சதுர்த்தி நன்னாளில், மண்ணால் விநாயகர் வடிவம் செய்து, விநாயகர் வழிபாடு செய்வது நம் வழக்கம். ஏன் மண்ணால் செய்ய வேண்டும்?

1. ஒன்றில் இருந்து ஒன்று
2. ஒன்றைத் தின்று ஒன்று
3. ஒன்றோடு  ஒன்று
4. ஒன்றுக்குள் ஒன்று

-என்பார் கவியரசர் கண்ணதாசன்.

1. நாம் எல்லோருமே ஒவ்வொருவராக, இந்த ஒரே பூமியில் இருந்துதான் வெளிப்பட்டோம். பூமியில் விளைந்த தானியங்களில் இருந்த நாம், தகப்பனாரிடம் (அவர் உண்ணும் உணவின் மூலமாக அடைந்து) இரண்டு மாதங்கள் இருப்போம். அதன்பிறகு தாயாரிடம் பத்து மாதங்கள் இருப்போம்; அதன்பிறகு பிறப்போம்.

2. ஒன்றைத் தின்று ஒன்று: இதற்கு விளக்கமே வேண்டாம். இந்த உலகத்தில் தோன்றிய எல்லா ஜீவராசிகளும், ஒன்று மற்றொன்றைத் தின்றே வாழ வேண்டியதாக இருக்கிறது.

3. ஒன்றோடு ஒன்று: திருமணம், குழந்தை, குடும்பம் என்று ஒன்றிப் போகிறோம்.

4. ஒன்றுக்குள் ஒன்று: உயிர் போய் விடுகிறது. உயிர் போன உடலை எரித்தாலும் சரி! புதைத்தாலும் சரி! அது மண்ணோடு மண்ணாகி விடும். எந்த மண்ணுக்குள் இருந்து வந்தோமோ, அந்த மண்ணுக்குள்ளேயே போய்க் கலந்து விட்டோம்.

எவ்வளவு கடினமான தத்துவத்தை, வார்த்தை விளையாட்டின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் கண்ணதாசன்! இப்படி, தோற்றத்திற்கும் முடிவிற்கும் அடிப்படையாக இருப்பது இந்தப் பூமி என்னும் மண் உருண்டைதான். இதை நமக்கு அறிவுறுத்தவே, மண்ணினால் விநாயகர் வடிவம் செய்து வழிபடச் செய்தார்கள் நமது முன்னோர்கள். ஆண் யானைக்குத்தான் தந்தம் உண்டு, பெண் யானைக்கு தந்தம் கிடையாது. ஆகவே விநாயகரின் தந்தம் உள்ள பகுதி ஆண் பகுதி, தந்தம் இல்லாத பகுதி பெண் பகுதி. மனித உடம்பு, பூதகணக் கால்கள். ஆக மொத்தத்தில் விலங்கு, மனிதன், ஆண், பெண், பூதகணங்கள் என அனைத்தும் இணைந்த ஒரே தெய்வ வடிவம் விநாயகர்.

அதுபோல எல்லோரும் இணைந்து, ஒற்றுமையாக இருப்பதே உயர்வைத் தரும். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு’ என பாரதியார் சொன்னதும் இதைத்தான். ஆகையால், விநாயகர் வழிபாட்டின் உண்மையை உணர்ந்து வழிபட்டு, ஒற்றுமையை வளர்ப்போம்.

ஒற்றுமை தரும் விரதம்

அவசியமான விரதம், அவசரத் தேவையான விரதம், புரட்டாசி மாதம் வளர்பிறை-தசமி அன்று தொடங்கி ஐப்பசி மாத சதுர்த்தசி அல்லது அமாவாசை வரை இருபத்தொரு நாட்கள் செய்ய வேண்டிய விரதம். அந்த விரதம் உருவான வரலாற்றை முதலில் பார்க்கலாம். கயிலையில் சிவபெருமானும் அம்பிகையும் ரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தார்கள். முனிவர்களும் தேவர்களும் அவரவர் முறைப்படி வணங்கினார்கள். அப்போது, பிருங்கி முனிவர் அங்கே வலம் வரத் தொடங்கினார். அவர் தீவிரமான சிவபக்தர். அவரைப் பொறுத்தவரை சிவன்தான், சிவன் மட்டுமே உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டவர்.

அதனால் பிருங்கி முனிவர், சிவனையும் அம்பிகையையும் சேர்த்து வலம் வராமல் சிவனை மட்டுமே வலம் வரத் தீர்மானித்தார். தீர்மானம் உடனே செயலானது. முனிவர் ஒரு வண்டாக மாறி சிவ தம்பதிகளின் இடையே புகுந்து சிவபெருமானை மட்டுமே வலம் வந்தார். பிருங்கியின் செயல், அம்பிகைக்குக் கோபத்தை வரவழைத்தது. அவள், ‘‘பிருங்கி முனியே! சக்தியை விலக்கிய நீ உன் சக்தியை இழப்பாய்!’’ என சாபம் தந்தாள். தப்ப முடியுமா? பிருங்கி உடனே சக்தியை இழந்தார். அவரால், நிற்கக்கூட முடியவில்லை. அப்போது பிருங்கிக்கு ஆதரவாக சிவபெருமான் ஒரு குச்சியைக் கொடுத்தார். (இதை ‘மூன்றாவது கால்’ என்பார்கள்.)

சாபம் கொடுத்த அம்பிகையின் சிந்தனையோ, வேறு மாதிரி இருந்தது.  சிவபெருமானை விட்டு நாம் பிரிந்திருப்பதால்தானே, இப்படி பிருங்கி செய்தார்? ஆகையால், இனி சிவபெருமானை விட்டுப் பிரியாதபடி, அவர் திருமேனியில் பாதியாக நாம் இடம் பெற வேண்டும் என்று தீர்மானித்தாள். உடனே அங்கிருந்து புறப்பட்டு விட்டாள். வழியில் கௌதமரின் ஆசிரமம் தெரிந்தது. அம்பிகை அதற்குள் நுழைந்து விட்டாள். அங்கிருந்த வில்வ மரத்தின் அடியில் அமர்ந்தாள். அப்போது கௌதமர் ஆசிரமத்தில் இல்லை. அவர் கங்கையில் நீராடி விட்டு, தர்ப்பை-சமித்து முதலியவற்றைச் சேகரித்து, ஆசிரமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அந்த ஆசிரமத்தில் இருந்த மரம்-செடி முதலானவை, நீண்ட காலமாக மழை இல்லாததால் வாடிப் போயிருந்தன. அம்பிகை வந்து அங்கே உட்கார்ந்ததும் மரம்-செடிகள் எல்லாம் பூத்துக் குலுங்கின; எங்கும் நறுமணம் பரவியது. ஆசிரமத்திற்குள் நுழைந்த கௌதமரை, அந்த நறுமணமும் பூத்துக் குலுங்கும் மரம்-செடிகளும் வரவேற்றன. கௌதமர் ஆனந்தப்பட்டார். ‘‘கங்கைக்குப் போய் நீராடி விட்டு வருவதற்குள், வாடியிருந்த இந்த மரம்-செடி-கொடிகள் எல்லாம் இப்படி மலர்ந்து மணம் பரப்புகின்றனவே! ஏதோ ஒரு தெய்வம் இங்கு வந்திருக்க வேண்டும். அதனால்தான் இப்படி!’’ என்று பரவசத்தோடு தேடினார். தேடியவரின் பார்வை, அம்பிகை மீது விழுந்தது.

அப்படியே நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்து வணங்கினார். அதன்பின் கைகளைக் குவித்து, ‘‘தாயே! தாங்கள் கயிலையை விட்டு நீங்கி, இங்கு எழுந்தருளியதற்கான காரணத்தை அடியேன் அறியலாமா?’’ எனக் கேட்டார். அம்பிகை, கயிலையில் நடந்ததைச் சொன்னாள். ‘‘அதனால் இறைவனின் திருமேனியில் பாதிபாகம் இடம் பெற வேண்டும், பிரிக்க முடியாதபடி அர்த்தநாரீஸ்வர வடிவம் பெற வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்தேன். ஆகையால், என் விருப்பம் நிறைவேறும்படியான விரதம் ஒன்றை செய்து வையுங்கள்!’’ என்றாள் அம்பிகை. அம்பிகைக்குத் தெரியாததையா கௌதமர் சொல்லப் போகிறார்? இருந்தாலும் கௌதமர் சொல்லத் தொடங்கினார்.

‘‘தேவீ! புரட்டாசி மாத வளர்பிறை, தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி அல்லது அமாவாசைவரை இருபத்தொரு நாட்கள் விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்திற்கு கேதாரீஸ்வர விரதம் என்று பெயர். இதை பக்தியுடன் செய்தால், சிவபெருமான் காட்சி தருவார். உங்கள் எண்ணமும் ஈடேறும்’’ என்றார். அதன்படியே அம்பிகை அந்த விரதத்தைச் செய்தார். தர்மத்தின் வடிவான ரிஷப வாகனத்தின் மீது காட்சி அளித்தார், சிவபெருமான். அம்பிகையின் விருப்பப்படியே தன் திருமேனியில் பாதிப் பகுதியை அம்பிகைக்குத் தந்து ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்ற திருநாமமும் கொண்டார். குடும்ப ஒற்றுமை குலைந்து போயிருக்கும் காலம் இது. இப்போதைய அவசரத் தேவை - அவசியத் தேவை, கணவன்-மனைவியரிடையே ஒற்றுமை. அதை அளிக்கக்கூடிய விரதம் இந்தக் கேதாரீஸ்வர விரதம்.

அனைத்து செல்வமும் தரும் அனந்த விரதம்

பாண்டவர்கள் வனவாசம் இருந்த காலம் அது. அவர்களுக்கு அடுக்கடுக்காகப் பல துன்பங்கள் வந்தன. எதற்கும் கலங்காத தர்மபுத்திரர்கூட, ‘‘கண்ணா! கருணையின் வடிவமே! இந்தத் துன்பங்களில் இருந்து நான் மீள ஒரு வழியைச் சொல்லுங்கள்!’’ என வேண்டினார். கண்ணன் சொன்னார்: ‘‘தர்மபுத்திரா, பாவங்களை எல்லாம் போக்கி, அவர்களுடைய விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கும் விரதம் ஒன்று உண்டு -‘அனந்த விரதம்.’ புகழ், நல்ல குழந்தைகள் என பல நன்மைகளையும் இது கொடுக்கும்’’ என்றார்.

‘‘கண்ணா, அந்த அனந்தன் யார்?’’

‘‘அந்த அனந்தன், நானேதான்! இந்திரன், அஷ்டவசுக்கள், ஏகாதச (11) ருத்திரர்கள், துவாதச (12) ஆதித்தியர்கள், சப்த (7) ரிஷிகள், மரங்கள், நதிகள், மலைகள் என அனைத்தும் என் வடிவங்களே. தீயவர்களை அழித்து பூமியின் பாரத்தைக் குறைக்கவும் நல்லவர்களைக் காப்பாற்றவும் நான் அனந்தன் என்ற பெயரால் வசுதேவருடைய வீட்டில் பிறந்தேன்.’’

‘‘அடியவர்களின் துயரத்தைத் தன் துயராக நினைக்கும் கண்ணா, அனந்த விரதத்தைப் பற்றிச் சொல்லுங்கள்!’’ என வேண்டினார். ‘‘கிருதயுகத்தில், சுமந்தன் என்பவர் இருந்தார். அவர், எல்லா சாஸ்திரங்களையும் நன்கு அறிந்தவர். அவருடைய மனைவி பெயர் தீட்சாதேவீ. மனம் ஒருமித்த தம்பதிகளான அவர்களுக்கு, சீலை என்று ஒரு மகள். அவள் பிறந்த சில நாட்களிலேயே, தீட்சாதேவீ இறந்து போனாள். மனைவியை பறிகொடுத்த சுமந்தன், மனைவி இல்லாவிட்டால், செய்யும் கர்ம-தர்மகாரியங்களுக்கு குறை வருமே என்று வருந்தினார். கர்க்கசை என்பவளை மறுமணம் செய்து கொண்டார்.

அவள் பெயரைச் சொல்வதற்கே, கடினமாக இருக்கிறதல்லவா? அவளும் பெயரைப் போலவே கடினமானவள்தான். தீய குணங்களின் ஒட்டு மொத்த இருப்பிடமாக இருந்தாள். மூத்தாள் மகளான சீலையிடம் வெறுப்பையே காட்டினாள். ஆனால், சீலை அதற்காக வருந்தவில்லை. மாற்றாந்தாய்க் கொடுமையை, யாரிடமும் சொல்லவில்லை. பெயருக்குத் தகுந்தாற்போல சீலம் கொண்டவளாகவும், பக்தி கொண்டவளாகவும் இருந்தாள். சீலைக்குத் திருமண வயது வந்தது. அவளைக் கௌண்டின்யர் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளைக்கு ஏதாவது கொடுக்க நினைத்தார் சுமந்தன். ஆனால் கர்க்கசை எதுவும் தர மறுத்து வீட்டினுள் சென்று விட்டாள். சுமந்தனுக்கு வருத்தம்.

ஆனாலும், கொஞ்சம் கோதுமை மாவை மாப்பிள்ளையிடம் தந்தார். ‘‘இது வழியில் உபயோகமாகும்,’’ என்று சொல்லி, மகளை மாப்பிள்ளையுடன் அனுப்பி வைத்தார்.கௌண்டின்யர் மனைவியுடன் போய்க்கொண்டிருந்தார். சூரிய உதய காலம் நெருங்கியது. பக்கத்தில் இருந்த ஒரு குளத்தில், சந்நியாவந்தனம் முதலான காலை இறைக் கடன்களை நிறைவேற்றப் போனார். அந்த நாள், அனந்த விரத நாள். ஏராளமான பெண்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து, தனித்தனியாக அனந்த பத்மநாம சுவாமியை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும், சீலை அவர்களிடம் போய், ‘‘நீங்கள் எல்லோரும் என்ன விரதம் செய்துகொண்டிருக்கிறீர்கள்?’’ எனக் கேட்டாள்.

அங்கிருந்த பெண்கள், ‘‘அனந்தமான (அளவிட முடியாத) பலன்களைக் கொடுக்கும் அனந்த விரதத்தை மேற்கொண்டிருக்கிறோம். புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று, இந்த விரதத்தைச் செய்ய வேண்டும்’’ என்று சொல்லி, அதற்கான வழிமுறைகளையும் விவரித்தார்கள். சீலை உடனே அனந்த விரதத்தைச் செய்யத் தீர்மானித்தாள். அங்கேயே நீராடி, தந்தை தந்திருந்த கோதுமை மாவைப் பயன்படுத்தி, அங்கிருந்த பெண்களின் உதவியோடு, விரதத்தைத் தொடங்கினாள். நோன்புக் கயிற்றைக் கட்டிக்கொண்டு, விரதத்தை முறைப்படி செய்து முடித்தாள். மனது திருப்தியாக இருந்தது சீலைக்கு. அதன்பிறகு அவள் அங்கிருந்து புறப்பட்டுக் கணவருடன், அவரது ஆசிரமத்தை அடைந்தாள்.

அனந்த விரதம், அளவில்லாத செல்வங்களை அளித்தது. சீலை தங்கமும் ரத்தினங்களுமாக ஜொலித்தாள். ஆனாலும் செல்வம்தான் கிடைத்துவிட்டதே என்று, அனந்த விரதத்தை அவள் நிறுத்தவில்லை. ஆண்டுதோறும் செய்து வந்தாள். ஆனால் அவள் கணவரான கௌண்டின்யரோ, செல்வத்தால் மதியிழந்தவரைப் போல நடந்துகொண்டார். ஒருநாள், வழக்கம்போல விரதத்தை முடித்துவிட்டு சீலை கணவரை வணங்கினாள். அவள் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிறு, கௌண்டின்யரின் பார்வையில் பட்டது. அவ்வளவுதான்! அவர் சீறினார்: ‘‘என்னடி இது? இந்த நோன்புக் கயிற்றைக் கட்டிக்கொண்டு, என்னை வசப்படுத்தப் பார்க்கிறாயா? இல்லாவிட்டால், வேறு எவனையாவது வசப்படுத்த எண்ணமா?’’ என்று கேட்டு மனைவியை அவமானப்படுத்தினார்.

சீலை வருந்தினாள். ஆனாலும் அமைதியாக, ‘‘சுவாமி! இது வெறும் கயிறு அல்ல. அனந்த பத்மநாப சுவாமியையே அல்லவா நான் இப்படி அழைத்து இருக்கிறேன். அவர் அருளால்தானே, நமக்கு இவ்வளவு செல்வங்களும் கிடைத்தன?’’ என்றாள். கௌண்டின்யர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். ‘‘அனந்தனாவது, ஒன்னாவது? அது என்னடி தெய்வம்?’’ என்று கத்தி மனைவியின் கையிலிருந்த கயிற்றை இழுத்து அறுத்து, எரியும் நெருப்பில்
வீசினார். சீலை துடித்தாள். ‘‘ஆ! இந்தச் சரடு அனந்தனின் வடிவம் அல்லவா? இது எரிந்தால் நமது குலமும், வீடும் அழிந்துபோகுமே!’’ என்று பதறி, தீயில் இருந்த சரடை எடுத்து அது எரிவதற்குள் பாலில் போட்டாள்.

நாட்கள் கடந்தன. கௌண்டின்யரின் செல்வம் குறையத் தொடங்கியது. அவரிடம் இருந்த பசுக்களை யாரோ திருடிக்கொண்டு போனார்கள். அவரது வீடு தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிப் போனது. உறவினர்களுடன் சண்டை ஏற்பட்டு, யாரும் கௌண்டின்யருடன் பேசாத நிலை உருவானது. கௌண்டின்யர் துன்பக் கடலில் மூழ்கினார். பிறகுதான் புத்தி வந்தது. ‘‘அனந்தா, என்னைக் கைவிடாதே!’’ என்று கத்திக்கொண்டே காட்டில் ஓடினார். எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம், ‘‘அனந்தனைக் கண்டீர்களா?’’ எனக் கேட்டார். வழியில் பழங்கள் நிறைந்த மாமரம் ஒன்று இருந்தது. அதனிடம் கேட்டபோது அது ‘‘இல்லை’’ எனப் பதிலளித்தது. அடுத்தது ஒரு பசுமாடு. ஏராளமான புல் இருந்தும் அதை மேயாமல் இருந்த அந்தப் பசுவிடமும் கேட்க, அதுவும் இல்லை என்றது. இதேபோல காளை, யானையிடமும் கேட்டு, அலுத்துப் போனார் கௌண்டின்யர்.

‘‘அனந்தா! அனந்தா!’’ என்று கத்தினார். அப்போது அவர் முன் தரிசனம் தந்தார் அனந்தர்; செல்வம், தர்ம சிந்தனை, முக்தி ஆகியவற்றையும் வரமாகத் தந்தார். சுவாமியைத் துதித்து வணங்கிய கௌண்டின்யர் தான் வழியில் கண்ட மாமரம் முதலானவற்றைப் பற்றிக் கேட்டார். அதற்கு சுவாமி சொன்ன பதில்தான் சுவாரசியம்: ‘‘நீ பார்த்த மாமரம் போன பிறவியில் ஒரு சிறந்த வித்வான். அவர், தான் கற்ற கல்வியை, கர்வத்தின் காரணமாக யாருக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை. அதனால் மரமானார். அடுத்து பார்த்தாயே பசு, அது, போன பிறவியில் நல்ல குலத்தில், பணக்காரனாக இருந்தான். ஆனால் யாருக்கும் ஒரு பிடி அன்னம்கூடத் தானம் செய்யவில்லை. அதனால், இப்படிப் பசுவாகி, புல் இருந்தும் மேய முடியாமல் அலைகிறான்.  அடுத்தது காளை. அது போன பிறவியில்  கர்வமுள்ள அரசனாக இருந்தது. விளையாத தரிசு நிலத்தை அப்போது அவன் தானம் செய்ததால் இப்போது காளையாகித் திரிகிறான். அடுத்தது யானை. அந்தணன் ஒருவன் தான் செய்த தர்மத்தை விலை பேசியதால் இப்படி யானையாகப் பிறந்திருக்கிறான்.’’
மனம் மாறிய கௌண்டின்யர் வீடு திரும்பினார். தன் மனைவி சீலையுடன் சேர்ந்து, அனந்த விரதத்தைச் செய்து, இழந்த செல்வங்கள் அனைத்தையும் பெற்று மங்கலமான வாழ்வை அடைந்தார். கண்ணன் பாண்டவர்களுக்குச் சொன்ன விரதம் இது. இதை அப்படியே கடைப்பிடித்துப் பாண்டவர்கள் நல்வாழ்வு பெற்றார்கள்.

No comments:

Post a Comment