Monday, October 1, 2012

பகவான் ரமணர் மகரிஷியின் வரலாறு


பகவான் ரமணர்

 பக்தர்களால் பகவான் என்றும் மஹர்ஷி என்றும் அன்போடு போற்றப்படும் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் வாழ்ந்த சுந்தரம் அய்யர் – அழகம்மை தம்பதியினருக்கு 30-12-1879ல் மகவாகத் தோன்றினார். பெற்றோர்கள் அவருக்கிட்ட பெயர் வேங்கடராமன். அரசு பதிவு பெற்ற வக்கீல் மணியமாகப் பணியாற்றி வந்த தந்தை சுந்தரம் அய்யர் குழந்தைகள் மீது கவனம் செலுத்தி மிக்க அன்புடன் வளர்த்து வந்தார்.  திருச்சுழியில் பாலர் வகுப்பில் பயின்ற வேங்கடராமன் பின்னர் திண்டுக்கல்லில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றான். அதன் பின்னர் மதுரை ஸ்காட் இடைநிலைப்பள்ளியில் இடைநிலை வகுப்பு பயின்றான். மூத்த சகோதரன் நாகசாமியும் வேங்கடராமன் படித்த அதே பள்ளியில் பயின்று வந்தான்.
வேங்கடராமனுக்கு 12 வயது நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தந்தையார் சுந்தரமய்யர் காலமானார். அவர் மறைவால் குடும்பம் நிலைகுலைந்தது. சுந்தரம்மய்யரின் இளைய சகோதாரர்கள் சுப்பய்யரும், நெல்லையப்பய்யரும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். வேங்கடராமன் மதுரை அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் உயர்கல்விக்காகச் சேர்க்கப்பட்டான். ஆனாலும் படிப்பை விட சக மாணவத்தோழர்களுடன் விளையாடுவதும், நீந்துவதும், குஸ்தி போடுவதும் ஆடிப்பாடுவதும் அவனுக்குப் பிடித்தமானதாக இருந்தது.

அண்ணாமலை
 
ஒருநாள் உறவினர் ஒருவர் வேங்கடராமனின் வீட்டிற்கு வந்தார். அவரை அதற்கு முன் கண்டதாக வேங்கடராமனுக்கு நினைவில்லை. அதனால் நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர் ‘அருணாசலத்திலிருந்து வருகிறேன்’ என்றார். ’அருணாசலம்’ என்ற வார்த்தையைக் கேட்டதுமே சிறுவனுக்கு ஓர் வியப்பு உண்டானது. உள்ளத்தில் அதுவரை இல்லாத ஓர் ஆனந்தப் பரவசம் ஏற்பட்டது. ஆனாலும் அதை இன்னதென்று அறிய இயலாத வேங்கட ராமன், ‘அது எங்குள்ளது?’ என்று கேட்டான் அதே ஆர்வத்துடன். ‘அடடா, பத்தாம் வகுப்பு படிக்கும் பையன் நீ. உனக்கு அருணாசலத்தைத் தெரியாதா? திருவண்ணாமலை என்ற ஷேத்திரத்தின் இன்னொரு பெயர்தான் அருணாசலம்’ என்றார் உறவினர்.

அருணாசலம்

 ”அருணாசலம்” என்ற அந்தப் பெயரைக் கேட்டது முதல் இன்னதென்று விளக்க இயலாத ஒரு ஆனந்த அதிர்வு நிலை அடிக்கடி ஏற்படத் துவங்கியது. பாடங்களில் மனம் ஒப்ப மறுத்தது. பெரிய புராணத்தை விரும்பிப் படித்தான். ஆன்மீக உணர்வு தலை தூக்கியது. அடிக்கடி மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குச் செல்வதும், அம்மையையும், அப்பனையும் அருள் வேண்டி வழிபடுவதும் அவன் வழக்கமானது.
           
    ஒருநாள்… இரவுநேரம்… சிற்றப்பாவின் வீட்டின் மாடியறையில் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த வேங்கட ராமனுக்கு, திடீரென ‘சாகப் போகிறோம்’ என்ற எண்ணம் தோன்றியது. உடல் வியர்த்தது. கை, கால் நடுங்கியது. ’சாவு என்றால் என்ன, அது எப்படி இருக்கும்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படியே கை, கால்களை நீட்டி, விறைத்த கட்டை போலப் படுத்துக் கொண்டான். கண்களை இறுக மூடிக் கொண்டான். மூச்சை முயன்று அடிக்கினான். ”இந்த உடல் செத்து விட்டது. ஆனால் இந்த உடலையும் மீறி ஓர் உணர்வு உயிர்ப்போடு இருக்கிறதே, அது என்ன? நான் என்பது இந்த உடலன்று; நான் என்பது இந்த மூச்சன்று; நான் என்பது இந்த நினைவுமன்று. இவற்றையெல்லாம் தாண்டிய தனிப்பொருள் ஒன்று என்னுள் ஒளிர்கிறதே, அதுவே நான். ஆம் அதுவே என்றும் அழிவற்ற நித்ய வஸ்துவாகிய ஆன்மா. அது பிறப்பதுமில்லை. இறப்பதுமில்லை. எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மமே அது. அதுவே நான்.” – இந்த எண்ணம் உறுதிப்பட்டவுடன், தான் யார் என்ற உண்மை தெரியவந்தது. அத்துடன் அவனது வாழ்வே மாறிப் போயிற்று.
           
                  நாளாக நாளாக படிப்பின் மேல் நாட்டம் குறைந்தது. விளையாட்டிலும் ஈடுபாடு போய் விட்டது. தன்னுள் ஆழ்ந்து கண்களை மூடி அமர்ந்திருப்பதும், அல்லது எங்கோ வெறித்து நோக்கியவாறு பிரம்மத்தில் தோய்ந்திருப்பதும் வழக்கமானது. ஒருநாள் வீட்டுப்பாடங்கள் செய்து கொண்டிருந்தவன் அதில் திடீரென சலிப்பும், வெறுப்பும் தோன்ற கண்களை மூடி அமர்ந்தான். அதைக் கண்ட அண்ணன் நாக்சுந்தரம், ”இப்படியெல்லாம் இருக்கிறவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு” என்றார் கோபத்துடன். ”ஆமாம், இவர் சொல்வது உண்மைதானே! இப்படியெல்ல்லாம் இருக்க நினைக்கும் எனக்கு இங்கே என்ன வேலை இருக்கிறது. என் தந்தை அருணாசலம் இருக்கும் இடத்தில் அல்லவா நான் இருக்க வேண்டும்’ என்ற எண்ணம் தோன்றியது.
          
        ”எனக்கு பள்ளியில் சிறப்பு வகுப்பு இருக்கிறது. ஆகவே நான் போக வேண்டும்” என்றான் அண்ணனிடம். அண்ணனும் ”அப்படியானால் கீழே பெட்டியில் ஐந்து ரூபாய் இருக்கிறது. போகும் வழியில் என் கல்லூரியில் எனக்கான மாதக் கட்டணத்தைச் செலுத்தி விட்டுச் செல்” என்று கூறினார். வீட்டினுள் சென்றான். வேக வேகமாக உணவருந்தினான். சித்தி ஐந்து ரூபாயை அவனிடம் கொடுத்தாள்.  தன வழிச்செலவுக்கு மூன்று ரூபாய் மட்டும் போதும் என்று நினைத்தான் வேங்கடராமன். தன் நோட்டுப் புத்தகத்தில் இருந்து ஒரு காகிதத்தைக் கிழித்தான்.
          
        “ நான் என்னுடைய தகப்பனாரைத் தேடிக் கொண்டு, அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டேன். இது நல்ல காரியத்தில் தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இதற்காக யாரொருவரும் விசனப்பட வேண்டாம். இதைப் பார்ப்பதற்காக பணமும் செலவு செய்ய வேண்டாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூ. 2 இதோடு கூட இருக்கிறது.
இப்படிக்கு
—————

         - என்று எழுதி வைத்து விட்டுக் கிளம்பி விட்டான். ’நான்’ என்று ஆரம்பித்து ‘இது’வாகி கடைசியில் ’—–’ என்று கடிதத்தை முடித்து தனக்குள்ளே தான் ஒடுங்கி, பேரும், ஊரும் அற்றிருப்பதை சூட்சுமமாக பகவான் பால ரமணர் உலகுக்கு அன்றே உணர்த்தி விட்டார். ஆனால் அதை அப்போதே உணர்வார்கள் யாருமில்லை.

பால ரமணர்
            
                    ரயிலில் ஏறி விழுப்புரத்தில் இறங்கி மாம்பழப்பட்டு வரை சென்று பின்னர் அங்கிருந்து கால்நடையாகவே நடந்து அண்ணாமலையை அடைந்தார் பால ரமணர். பின் அதுவே அவரது நிரந்தர வாசஸ்தலமாயிற்று. பாதாள லிங்கக் குகை, மாமரத்துக் குகை, பவழக்குன்று, விருபாக்ஷிக் குகை, ஸ்கந்தாச்ரமம் என பல இடங்களிலும் மாறி மாறி வசித்தவர், பின்னர் தாயை சமாதி செய்வித்த அடிவாரைத்தையே தமது நிரந்தர வாசஸ்தலமாகக் கொண்டார். அதுவே பின்னர் ரமணாச்ரமம் ஆயிற்று. அவரது அருள் ஒளி தரிசனம் பெற பலரும் திரண்டு வந்தனர். ஆன்மீக சூரியனாய் அவர் தகிக்க அவரது ஒளி தரிசனத்தைப் பெற உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் பல அறிஞர்கள் வந்தனர். பகவானின் அருளமுதம் பருகினர். அவர் புகழைப் பரப்பினர்.

ரமண மகர்ஷி

ரமணர் செய்த அற்புதம்

                ரமணர் விருபாஷிக் குகையில் தங்கி இருந்த காலம். ஒரு நாள் மாலை வேலையில் திரளாக பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ஸ்ரீ பகவானை தரிசித்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திடீரென மழை பொழியத் துவங்கியது. மெதுவாக ஆரம்பித்த மழை பேய் மழையாகக் கொட்டித் தீர்த்தது. தரிசிக்க வந்தவர்கள் யாரும் கீழே இறங்கிச் செல்ல முடியாத நிலை. மாலை கடந்து இரவும் வந்து விட்டிருந்தது. இரவு எட்டு மணியைக் கடந்து விட்டதால் ஒவ்வொருவருக்கும் நல்ல பசி ஏற்பட்டது. ஆனால் அத்தனை பேருக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை. பகவானின் அடியவரான பழனிசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பகவானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
          
               பகவானும், ‘சரி, சரி மழை விடுவதாகத் தெரியவில்லை. இவர்களோ பாவம் பசிக்களைப்பில் இருக்கிறார்கள். அதனால் இருக்கும் உணவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடு’ என்றார்.
           
                   உடனே பழனிசாமி உணவை  சிறு சிறு உருண்டையாக உருட்டி வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கத் தொடங்கினார். அவர்களும் அந்தச் சிறு கவளங்களை ரமணப் பிரசாதமாக நினைத்து வாங்கி உண்டனர். மூன்று பேருக்கு மட்டுமே வைத்திருந்த அந்த உணவு கிட்டத்தட்ட முப்பது பேர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அனைவருக்கும் வயிறு நிறைந்து விட்டதுடன் அறுசுவை உணவு உண்ட திருப்தியும்  ஏற்பட்டது. தண்ணீர் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு வயிறு நிறைந்திருப்பதைக் கண்டு ‘எல்லாம் ரமணரருள்’ என்று எண்ணித் தொழுதனர் பக்தர்கள். எல்லாவற்றிற்கும் காரண சூத்ரதாரியான ரமணரோ ஒன்றும் பேசாமல் எங்கோ மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார்.

அருணாசல ரமணன்
            
                 இவ்வாறு பற்பல அற்புதங்கள் புரிந்த மனிதர் மனிதர்கள் மட்டுமல்லாது காகம், பசு, மயில், குரங்கு, நாய், அணில் என மிருகங்கள் மீதும் அளவற்ற அன்பு பூண்டு ஒழுகினார். காகத்திற்கும், பசு லக்ஷ்மிக்கும் முக்தி அளித்தார். தம்மை நாடி வந்தவர்களுக்கு ஆன்மீக உணர்வைத் தூண்டி உள்ளொளி எழுப்பினார். அவர்கள் தம்மைத் தாமே உணர்ந்து உயர வழிகாட்டினார்.

ரமணர்
           
              நாளடைவில் பகவானை புற்றுநோய் தாக்கிற்று. பகவான் தம்மை உடல் என்று நினைக்காததால் அந்த நோய் தாக்குதல் குறித்து கவலைப்படவில்லை என்றாலும் அதனால் கடும் வேதனையைச் சந்தித்தார். பல மருத்துவச் சிகிச்சைகளுக்கும் கட்டுப்படாத அது, அவரைப் பெரிதும் வருத்தியது. படுத்த படுக்கையாகவும் சில நாட்கள் இருக்க வேண்டி வந்தது. 14-04-1950 இரவு 8.47 மணிக்கு பகவான் மகா சமாதி அடைந்தார். இவர் உயிர் பிரிந்த தருணத்தில், ஆசிரமத்திலிருந்து மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றி, தெற்கிலிருந்து வடக்காகப் புறப்பட்டு, அருணாசல மலைக்குள் சென்று கலந்தது. இதன் மூலம் அருணாசலரே, பூவுலக மக்களின் துயர் துடைக்க ரமணராய் அவதரித்தார் என்பது உண்மையானது.

ரமணர் சமாதி

அவரது இறப்பிற்கு தாயாரின் சமாதியை ஒட்டி அவரது உடல் திருமந்திர முறைப்படி சமாதி செய்விக்கப் பெற்றது. இன்றும் ரமணாச்ரமத்திலிருந்து தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு சூட்சும ரீதியில் பகவான் உதவிக் கொண்டுதான் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஓம் நமசிவாய

    ReplyDelete
  3. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் ஸ்ரீ நமோ ரமண மஹரிஷீயே போற்றி போற்றி,,,,,

    ReplyDelete
  4. ஓம் நமசிவாய நம
    ஓம் நமசிவாய நம
    ஓம் நமசிவாய நம
    ஓம் நமசிவாய நம
    ஓம் நமசிவாய நம
    ஓம் ரமண பகவான் நம

    ReplyDelete
  5. ஓம் ஶ்ரீ ரமண மகரிஷியே நமஹ

    ReplyDelete
  6. மகரிஷிஅவர்களின் அருளாசி எப்பொழுதும்கிடைக்கபெற வேண்டுகிறேன்.வாழ்கவளமுடண்

    ReplyDelete
  7. ஓம் நமோ பகவதே ஸு ரமணாய

    ReplyDelete
  8. ஓம் நமசிவாய

    ReplyDelete